தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

ரஹ்மான், அனிருத்தை தவிர்த்து: மாரிஸ் விஜய்யை பாடகர் மனோ தேர்வு செய்தது ஏன்?

சென்னை: கடந்த 2014ம் ஆண்டு ‘விஞ்ஞானி’ என்ற படம் மூலம் இசையமைப்பாளராக சினிமாவில் அறிமுகமானவர் மாரீஸ் விஜய். குறிப்பிட்ட சில படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து இசையமைத்து வருகிறார். தற்போது ‘வட்டக்கானல்’ என்ற படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில் பாடகர் மனோவின் மகன் துருவன் மனோ ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தின் பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் நேற்று வெளியிட்டார். மாரீஸ் விஜய் தனது 25 ஆண்டுகால இசை பயணத்தை பற்றி பேசியுள்ளார்.

அவர் கூறும்போது, ‘‘சென்னை ராயபுரத்தில் பிறந்து, வளர்ந்த நான் கடந்த 2000ம் ஆண்டு முதல் பல காஸ்பெல் நிகழ்ச்சிகளில் இசையமைத்து இருக்கிறேன். சிறுவயதில் கீபோர்டு வாங்குவதற்கு கூட என்னிடம் பணம் இருக்காது. சுயமாக உழைத்து எனது முயற்சியில் இந்த இடத்தை அடைந்திருக்கிறேன். சர்ச்சுகளில் தொடங்கிய எனது இசை பயணம் இன்று பல முன்னணி பாடகர்களுடன் பணியாற்றிவிட்டேன். இந்தியில் ‘தேரே பினா தில்’ என்ற பாடல் தான் நான் இசையமைத்த முதல் ஆல்பம் பாடல்.

பிறகு, ‘வில்லவன்’ என்ற மலேசிய தமிழ் படத்திற்கு இசையமைத்தேன். அதனைத் தொடர்ந்து இந்தியில் சில படங்களும் ஹாலிவுட் படங்களுக்கும், டிவி தொடர்கள், விளம்பர படங்கள், சென்னை அசோக் நகரில் சொந்தமாக ‘டிரினிட்டி’ என்ற ஸ்டுடியோவை நடத்தி வருகிறேன். தமிழில் தற்போது ஸ்டுடியோ 9 நிறுவனத்தில் 3 படங்களுக்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றார். வட்டக்கானல் படத்துக்கான இசையமைப்பாளரை மனோ தான் தேர்வு செய்தார். மனோவுக்கு இளையராஜா, ரஹ்மான், அனிருத் உள்பட பல இசையமைப்பாளர்கள் தெரிந்திருந்தாலும் மாரிஸ் விஜய்யை தனது படத்துக்கு தேர்வு செய்திருப்பது, அவரது இசை மேல் உள்ள நம்பிக்கைதான் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.