ராகு கேது: விமர்சனம்
சாயாகிரகங்களான ராகு, கேது இருவரும் நிழல் கிரகங்களாக, மற்ற 7 கிரகங்களுடன் சேர்ந்து நவகிரக அந்தஸ்து பெறுகின்றனர். ராகு, கேது ஒரே உடலாக சுபர்பானுவாக இருந்தபோது, அவரை காதல் திருமணம் செய்யவிருக்கும் ரோகிணி என்பவர், இப்போது சுபர்பானு ராகு, கேதுவாக உருமாறியதை அறிந்து, தான் திருமணம் செய்யவிருப்பது சுபர்பானுவின் சிரத்தோடா அல்லது உடலோடா என்று தீர்மானிக்க முடியாமல் கன்னியாக வாழும் கிளைக்கதை இடம்பெறுகிறது. ஜோதிடம் மற்றும் ஆன்மீகத்தை நம்புபவர்களுக்கான படம் இது.
ராகு, கேது உருவான வரலாறு மற்றும் அவர்கள் மனித வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து தமிழ்மாமணி துரை.பாலசுந்தரம் விறுவிறுப்பாக இயக்கி, சுபர்பானு வேடத்தில் நடித்துள்ளார். காட்சிகளை நாடக பாணியிலேயே அமைத்துள்ளார். கிராபிக்ஸ் காட்சிகளில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். சிவபெருமானாக சமுத்திரக்கனி, பார்வதியாக கவுசிகா கோபி கிருஷ்ணன், மகா விஷ்ணுவாக விக்னேஷ், துர்க்கையாக கஸ்தூரி, ஜோதிடராக கே.பி.அறிவானந்தம் மற்றும் சந்தியாஸ்ரீ, சாதனா சங்கர், ஜெயசீலன், ரவிகுமார் உள்பட பலர், தங்கள் கேரக்டருக்கு சிறப்பு சேர்த்துள்ளனர்.
புராணக்கதையை இன்றைய தலைமுறையினருக்கு புரியும் வகையில், கே.பி.அறிவானந்தம் பக்தி மணம் கமழ கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதியுள்ளார். மோகன் பிரசாந்த் ஒளிப்பதிவு, பரணிதரன் பின்னணி இசை, கிட்டாரிஸ்ட் சதா சுதர்சனத்தின் பாடல்களுக்கான இசை, பி.லெனின் எடிட்டிங் ஆகியவை, படத்துக்கு பலம் சேர்த்துள்ளன. நாகதோஷம், அதற்கான பரிகாரம் மேற்கொள்ள ஸ்ரீகாளஹஸ்தி கோயில் போன்ற விஷயங்களை, அறிவியல்பூர்வமாக இல்லாமல், ஆன்மீக வழியில் சொல்லியிருக்கின்றனர். ஆன்மீக பிரியர்களை படம் கவரும்.