ராம் சரணுக்கு அம்மாவாக நடிக்க சுவாசிகா மறுப்பு
ஐதராபாத்: தெலுங்கில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் ராம் சரண். இவர் மெகாஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ஆவார். இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் பெத்தி. இப்படத்தை இயக்குநர் புஜ்ஜி பாபு இயக்கி வருகிறார். மேலும் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்க, ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். கடந்த ஆண்டு தமிழில் வெளிவந்த அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் லப்பர் பந்து. இப்படத்தில் மிகமுக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை சுவாசிகா. இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த பேட்டியில் பேசிய அவர், ‘‘அம்மாவாக நடிக்க எனக்கு தொடர்ந்து பல வாய்ப்புகள் வந்தன. அதில் எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது, ராம் சரணுக்கு அம்மாவாக நடிக்க கேட்டதுதான். ‘பெத்தி’ என்கிற படத்திற்காகத்தான் கேட்டார்கள். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படம் அது. ஆனால், நான் நோ சொல்லிவிட்டேன். எனக்கு 33 வயதுதான். இப்போது நான் ராம் சரண் அம்மாவாக நடிக்க வேண்டிய அவசியம் இல்லை. அந்த நேரம் வரும்போது நான் நடிக்கிறேன்’’ என கூறியுள்ளார். ராம் சரணுக்கு தற்போது 40 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.