ரவி மோகன் மீது ஆர்த்தி கடும் தாக்கு
சென்னை: ரவி மோகனின் சொகுசு பங்களா ஜப்தி நடவடிக்கை தொடர்பாக அவரது மாஜி மனைவி ஆர்த்தி தெரிவித்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஈசிஆர் ஈஞ்சம்பாக்கத்தில் நடிகர் ரவி மோகன் சொந்தமாக சொகுசு பங்களா வைத்துள்ளார். இதில் ரவி மோகனும் அவரது மனைவி ஆர்த்தியும் வசித்து வந்தனர். இதற்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக, ரவி மோகனும் ஆர்த்தியும் பிரிந்துவிட்டனர். ஆர்த்தியிடம் விவாகரத்து கோரி ரவி மோகன் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில் தனியார் வங்கியில் கடன் பெற்றுதான் ஈசிஆர் பங்களாவை ரவி மோகன் வங்கியிருக்கிறார். அந்த பங்களாவுக்கு கடந்த 10 மாதங்களாக மாத தவணை கட்டவில்லை என்று கூறப்படுகிறது. சொகுசு பங்களாவை தனியார் வங்கியில் கடன் பெற்று வாங்கியதாகவும், கடந்த 10 மாதங்களாக மாத தவணை செலுத்தவில்லை என்றும் வங்கி தரப்பில் கூறிய நிலையில் நடிகர் ரவி மோகனின் ஈசிஆர் சொகுசு பங்களா வீட்டை ஜப்தி செய்ய முடிவு செய்த வங்கி நிர்வாகம் எச்சரிக்கை நோட்டீசை அனுப்பியுள்ளது.
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆர்த்தி வெளியிட்ட பதிவில், ‘‘நீங்கள் மற்றவர்களை வேண்டுமானால் முட்டாளாக்கலாம். ஏன் உங்களையே கூட முட்டாளாக்கிக்கொள்ளலாம். ஆனால் கடவுளை மட்டும் முட்டாளாக்க முடியாது’’ என்று தெரிவித்துள்ளார். 10 மாதங்களாக வங்கியை ரவி மோகன் முட்டாளாக்கினார். ஆனால் இப்போது சிக்கிக் கொண்டார் என்ற கருத்தை சொல்லவே அவர் இதுபோல் பதிவிட்டுள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.