விமர்சனம் பன் பட்டர் ஜாம்
ஒன்லைன் காமெடிக்கு ராஜு ஜெயமோகனின் பாடிலாங்குவேஜ் ஓ.கே என்றாலும், ஆங்காங்கே செயற்கைத்தனம் எட்டிப்பார்க்கிறது. ‘வெள்ளரிக்கா’ ராம்ஜி, ஜீவா தங்கவேல் போன்றோரின் சாயல் தெரிவதால் அப்படி இருக்கலாம். பாவ்யா த்ரிகா செய்யும் அலப்பறையும், இருவரது காதலுக்கு இடையிலான தவிப்பும் பாஸ் மார்க் வாங்கிவிடுகிறது. விஜே பப்பு, ஆதியா பிரசாத் ஜோடியின் காதல் குறும்புகள் சுவாரஸ்யமாகவும், சிரிக்கவும் வைக்கின்றன. மைக்கேல் தங்கதுரை, சரண்யா பொன்வண்ணன், சார்லி, தேவதர்ஷினி ஆகியோர் அனுபவ நடிப்பை வழங்கியுள்ளனர். சிறப்பு வேடத்தில் வரும் விக்ராந்த், அட்வைஸ் மழை பொழிகிறார்.
முழு படத்தையும் தனது ஒளிப்பதிவால் கலர்ஃபுல் ஆக்கியுள்ளார், பாபு குமார். எடிட்டர் ஜான் ஆபிரஹாம், காட்சிகளின் நீளத்தை குறைத்திருக்கலாம். நிவாஸ் கே.பிரசன்னா இசையில் பாடல்கள் ஈர்க்கிறது. பின்னணி இசை விறுவிறுப்புக்கு உதவுகிறது. ‘பன் பட்டர் ஜாம்’ பற்றிய விளக்கத்தின் மூலம் வாழ்க்கையையும், காதலையும் இயக்குனர் ராகவ் மிர்தாத் பிணைத்துள்ளார். வழக்கமான காதலை, வழக்கமான பாணியிலேயே சொல்லியிருக்கிறார்.