விமர்சனம்: ஒண்டிமுனியும் நல்லபாடனும்
நிலத்தில் கடினமாக உழைக்கும் பாட்டாளியை, ‘நல்லபாடன்’ என்று சொல்வது கொங்கு வட்டார வழக்கம். வான்மழையை நம்பி சிறுநிலத்தில் உழுது வாழ்க்கை நடத்தும் நல்லபாடன் பரோட்டோ முருகேசன், கிணற்றில் விழுந்த தனது மகன் விஜயனின் உயிரைக் காப்பாற்ற வேண்டி, ஒண்டிமுனிக்கு ஒரு கிடாயை நேர்ந்து விடுகிறார். ஊரிலுள்ள 2 பண்ணையார்களின் ஈகோவால், பல வருடங்களாக ஒண்டிமுனிக்கு திருவிழா நடக்கவில்லை. கிடா வளர்கிறது. 50 ஏக்கர் கொண்ட பண்ணையார் கார்த்திகேசனிடம், ஊர் மக்களின் நீராதாரத்துக்காக குளம் வெட்ட அரசு 5 ஏக்கர் நிலம் கேட்கிறது. அதை கொடுக்க மறுக்கும் கார்த்திகேசன், சூழ்ச்சி வலை பின்னி, பரோட்டா முருகேசனை வைத்து, அங்குள்ளவர்களின் கைரேகையை வாங்கி, 5 ஏக்கர் நிலத்தை அபகரிக்கிறார். இந்நிலையில், திடீரென்று சமாதானம் அடைந்த 2 பண்ணையார்களும் ஒண்டிமுனிக்கு திருவிழா நடத்த கூடுகின்றனர். அப்போது எதிர்பாராத சம்பவம் நடக்கிறது. அது என்ன என்பது மீதி கதை.
ஒண்டிமுனி என்ற சிறுதெய்வத்தை குலதெய்வமாக வழிபடும் மக்கள், தாங்கள் கொண்ட கடவுள் நம்பிக்கையின் காரணமாக, தங்கள் உழைப்பைச் சுரண்டும் ஆதிக்க சக்திகளின் அராஜகத்தை எப்படி வேரழிக்கிறார்கள் என்பதை கொங்கு வட்டார பின்னணியில் யதார்த்தமாக சொல்லியிக்கும் படம் இது. அராஜக பண்ணையார்களின் உழைப்புச் சுரண்டல்களுக்கு எதிராக, நல்லபாடன் என்ற பரோட்டா முருகேசன் நடத்தும் எளிய போராட்டங்கள் வலிமையாக இருக்கிறது. கேரக்டராகவே மாறிய அவருக்கு விருதுகள் கிடைக்கும். அவரது மகனாக விஜயன் தியா, மகளாக சித்ரா நாகராஜன், மருமகனாக விஜய் சேனாதிபதி, விஜயன் தியாவின் காதலியாக வித்யா சக்திவேல் மற்றும் தமிழினியன், கவுசிகா, விகடன் உள்பட அனைவரும் யதார்த்தமாக நடித்துள்ளனர்.
படத்தின் இன்னொரு ஹீரோ, ஒளிப்பதிவாளர் ஜெ.டி.விமல். கொங்கு மண்ணின் இயல்பை திரையில் கொண்டு வந்திருக்கிறார். பாடல்கள் இல்லை. ‘மூடர் கூடம்’ நடராஜன் சங்கரனின் பின்னணி இசை, படத்தின் ஜீவநாடியாக இருக்கிறது. சதீஷ் குரோசோவா எடிட்டிங் கச்சிதம். ‘தெய்வங்கள் முன்னால் பலியிட வேண்டியது ஆடுகளை அல்ல, சமூகத்தை சுரண்டி பிழைக்கும் கேடுகெட்ட மனிதர்களை’ என்ற வசனம், படத்தின் கருத்தை உறுதி செய்துள்ளது. எழுதி இயக்கிய சுகவனம் பாராட்டுக்குரியவர். பட உருவாக்கத்தை இன்னும் மேம்படுத்தி இருக்கலாம்.
