வெற்றியை மக்களுக்கு வழங்கிய ரிஷப் ஷெட்டி
ரிஷப் ஷெட்டி எழுதி இயக்கி நடித்து வெளியான ‘காந்தாரா: சாப்டர் 1’ என்ற பான் இந்தியா படம் 800 கோடி ரூபாய் வரை வசூலித்து சாதனை படைத்துள்ளது. இதையடுத்து ஆன்மிக பயணம் மேற்கொண்ட ரிஷப் ஷெட்டி அளித்துள்ள பேட்டியில், ‘காசிக்கு சென்றால் ராமேஸ்வரத்துக்கு வந்தாக வேண்டும். ’காந்தாரா: சாப்டர் 1’ படம் ஈஸ்வரனின் கிணறு பற்றியும், நமது தெய்வத்தை பற்றியதுமாக உருவானது. இதற்கு மக்கள் மிகப்பெரிய வெற்றியை பரிசளித்தனர். இந்த வெற்றியில் மக்களுக்கும் பங்கு இருக்கிறது. படத்தை முடித்து மக்களிடம் கொண்டு செல்லும் வரை எனக்கு ஆசிர்வாதம் இருந்தது.
அதனால்தான் ராமேஸ்வரம் வரை வந்திருக்கிறேன். நல்ல தரிசனம் கிடைத்தது. அதை நினைத்து சந்தோஷமாக இருக்கிறது. தமிழகத்தில் ’காந்தாரா: சாப்டர் 1’ டப்பிங் செய்து வெளியிடப்பட்டது என்றாலும், அதற்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. இதற்காக மக்களுக்கு நன்றி சொல்கிறேன். தமிழ்நாட்டில் என் படத்தை விளம்பரப்படுத்த சென்னைக்கு வரவேண்டிய நேரத்தில், திடீரென்று சில எதிர்பாராத சம்பவங்கள் நடந்துவிட்டது. அதனால்தான் இங்கு என்னால் வர முடியவில்லை. ஆனால், நண்பர்கள் எனக்கு போன் செய்து பேசினார்கள். இப்படத்தை தியேட்டர்களில் மக்கள் எப்படி கொண்டாடி மகிழ்ந்து ரசித்தார்கள் என்பதை அவர்கள் சொன்னார்கள்.
இணையதளங்களில் வெளியான விமர்சனங்களையும் படித்தேன். எனது அடுத்த படத்தில் இன்னும் பல்வேறு புதிய முயற்சிகளில் ஈடுபட்டு, மக்களை மகிழ்விக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன்’ என்றார்.