தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

' ராபர் ' - திரைவிமர்சனம்

இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ் சார்பில் பத்திரிகையாளர் கவிதா எஸ் மற்றும் அவருடன் மெட்ரோ ப்ரொடக்ஷன்ஸ் ஆனந்த கிருஷ்ணனும் இணைந்து தயாரிக்க மெட்ரோ ‘திரைப்படத்தின் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் கதை திரைக்கதை எழுத்தில்  எஸ். எம்.பாண்டி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் ' ராபர் ' . சத்யா நாயகனாக நடிக்க, அவருடன் தீபா சங்கர், ஜெயபிரகாஷ், சென்ராயன்,...

இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ் சார்பில் பத்திரிகையாளர் கவிதா எஸ் மற்றும் அவருடன் மெட்ரோ ப்ரொடக்ஷன்ஸ் ஆனந்த கிருஷ்ணனும் இணைந்து தயாரிக்க மெட்ரோ ‘திரைப்படத்தின் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் கதை திரைக்கதை எழுத்தில்  எஸ். எம்.பாண்டி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் ' ராபர் ' . சத்யா நாயகனாக நடிக்க, அவருடன் தீபா சங்கர், ஜெயபிரகாஷ், சென்ராயன், டேனி போப் மற்றும் பலர் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வேலைக்காக சென்னை வருகிறார் சத்யா ( ' மெட்ரோ ' சத்யா) . நல்ல வேலையும் கிடைக்கிறது. ஆனால் சத்யாவின் பெண்களின் மீதான பேராசையால் வாங்கும் சம்பளம் போதாமல் அதிக பணத்திற்கு ஆசைப்படுகிறார். நேர்வழியில் சம்பாதித்தால் நிச்சயம் தான் எதிர்பார்த்த ஆசைகளை சீக்கிரம் அடைய முடியாது என்கிற நிலையில் பிக் பாக்கெட், செயின் அறுப்பு என திருட்டு வேலைகளை செய்கிறார். அவருக்கு இந்தத் திருட்டு அவரை ஒரு கொலை செய்யும் அளவுக்குக் கொண்டு போகிறது. யாரைக் கொலை செய்தார், அதற்கு பின்னணி விளைவுகள் என்ன ? என்பது மீதிக் கதை.

வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்னும் பழமொழியை கையில் எடுத்துக் கொண்டு அதற்கு நியாயமான கதையை சொன்ன கதை ஆசிரியர் ஆனந்த கிருஷ்ணன் மற்றும் எம்.பாண்டி இருவருக்கும் பாராட்டுக்கள்.

நடிகர் சத்யா அப்பாவி என்கிற பார்வையில் பார்த்தால் அப்பாவி, அடப்பாவி என்கிற அதிர்ச்சியில் பார்த்தால் அடப்பாவி தான். அந்த அளவிற்கு நடிப்பை கொடுத்திருக்கிறார். ' பார்ப்பதற்கு அப்பாவி போல் இருக்கும்' என்கிற செய்தி சேனல்களின் வாசகத்திற்கு ஏற்ப அப்படியே பொருந்தி போகிறார் சத்யா.

சத்யாவை தொடர்ந்து கவனம் பெறுபவர் டேனி போப் , ஹெச் .ஆர் மற்றும் எச்சச்சோறு கதாபாத்திரத்தில் அருமையான நடிப்பை கொடுத்திருக்கிறார். இதுவரையிலும் காமெடியன், ஹீரோக்களின் காமெடியான நண்பன் இப்படிப் பார்த்த டேனியை முதல்முறையாக எதிர்மறை கதாபாத்திரத்தில் வேறு ஒரு அவதாரத்தில் காட்ட நினைத்ததே மிகப்பெரிய புத்திசாலித்தனம் எனலாம். ஜெயபிரகாஷ், தீபா ஷங்கர், சென்ராயன், உள்ளிட்டோர் கதைக்குத் தேவையான நடிப்பை கொடுத்து கவனம் பெறுகிறார்கள். மிக முக்கியமாக சென்ராயனின் கதாபாத்திரம் பல இடங்களில் நம்மை சிரிக்கவும் வைத்திருக்கிறது.

என்எஸ் உதயகுமார் ஒளிப்பதிவில் சென்னையின் நகரத்து வாழ்வியலை யதார்த்தமாக எடுத்து வைக்கிறது. மேலும் ஒருசில ரயில் நிலையங்கள், கேட்பாரற்று கிடக்கும் சாலைகள் என அரசாங்கமும் கவனத்தில் கொள்ள வேண்டிய இடங்களை படம் பிடித்துக் காட்டியிருப்பது அருமை.

ஸ்ரீகாந்த் என்பி படத்தொகுப்பில் முதல் பாதி எப்போது துவங்கியது எப்போது முடிந்தது என்று தெரியாத அளவிற்கு அவ்வளவு விறுவிறுப்பு. இரண்டாம் பாதியில் ஒரு கட்டிடத்தில் நிகழும் காட்சிகளை சற்றே குறைத்திருக்கலாம். எனினும் பெரிதாக குறையாக தெரியவில்லை.

ஜோகன் சிவனேஷ் இசையில் அண்டர் வேர்ல்ட் காட்சிகள், அதில் வரும் பாடல்கள் என அனைத்தும் நம்மை கதைக்குள் இன்னும் ஆழமாக கொண்டு செல்கின்றன.

குற்றவாளிகள் அழுக்கு சட்டை, பரட்டைத் தலை, இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இல்லை, நல்ல ஐடி நிறுவனத்தில் வேலை செய்து கொண்டு அல்லது ஒரு தனியார் நிறுவனத்தின் பணியாளராக ஃபார்மல் சூட்டில் கூட இருப்பான் என்னும் இன்னொரு புது பயத்தையும் இந்தப் படம் உண்டாக்குகிறது.

படத்தின் மிகப்பெரிய பிளஸ் பேசும் வசனம் தான்.  பல இடங்களில் ரத்தம் சொட்டக் கதை சொன்னாலும் சில இடங்கள் நம்மையும் மீறி சிரிக்கவும் வைத்துவிடுகிறது. எதார்த்தமான காமெடி வசனங்கள் பல இடங்களில் பளிச் ரகமாக ரசிக்க வைக்கின்றன.

மொத்தத்தில் அழகுக்காக அணியும் நகை பெண்களின் உயிரை பல இடங்களில் குடித்துக் கொண்டிருக்கிறது அதற்கு ஏற்ப ஜாக்கிரதையாக இருங்கள் என அலர்ட் மணி அடிக்கும் வகையில் ' ராபர்' திரைப்படம் தவிர்க்க முடியாத சமூகப் படமாக மாறி இருக்கிறது.