வதந்தியால் வீட்டை விட்டு வெளியே வரவில்லை: பிரிகிடா பகீர்
‘ஆஹா கல்யாணம்’ என்ற வெப் தொடரில் பவி டீச்சராக நடித்து பிரபலமானவர் நடிகை பிரிகிடா. அந்த படத்தை தொடர்ந்து பார்த்திபன் இயக்கி நடித்த ‘இரவின் நிழல்’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தார். தற்போது விஜய் ஆண்டனியின் ‘மார்கன்’ படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில் பிரிகிடா பல விஷயம் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார். ‘‘நான் அந்த நடிகருடன் டேட்டிங் செல்கிறேன், இந்த நடிகருடன் டேட்டிங் செல்கிறேன் என பல விதமான செய்திகள் வருகின்றன.
இதுபோன்ற வதந்திகளால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி சில மாதம் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. அதன் பிறகு தான் என்னுடைய அப்பா எனக்கு தைரியத்தை கொடுத்தார். இப்போது கூட எனக்கு திருமணமாகிவிட்டது என்றார்கள். அதே போல, நடிகர் நகுல் என்னிடம் அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்டார். நான் முடியாது என்பதால், படத்தில் இருந்து தூக்கிவிட்டார் என்று ஒரு வதந்தி பரவியது. அதுபோல் எதுவுமே நடக்கவில்லை நானும், நகுலும் இணைந்து ஒரு படத்தில் கமிட்டாகி இருந்தோம்.
ஆனால், சில காரணங்களால் அந்த படத்தில் நான் நடிக்கவில்லை. இதற்காக பலரும் பல விஷயத்தை பேசினார்கள். நான் இரவின் நிழல் படத்தில் நடித்த போது, நிர்வாணமாக நடித்து விட்டேன் என்று பலரும் இணையத்தில் மோசமான கருத்துக்களை பகிர்ந்தார்கள். ஆனால், அது அப்படி இல்லை, அது சினிமாவை சேர்ந்த பலருக்கும் நன்றாக தெரியும். அந்த காட்சிகள் நான் நடித்த போது, மெல்லியதாக ஒரு உடை அணிந்திருந்தேன். ஆனாலும் எனது பெயரை கெடுக்க முயன்றார்கள். அதையெல்லாம் தாண்டித்தான் மார்கன் படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்து பெயர் வாங்கியுள்ளேன்’’ என்றார் பிரிகிடா.