ஓடும் ரயிலில் அடித்து உதைத்த தந்தை: வேத் லட்சுமி கண்ணீர் பேட்டி
சென்னை: தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்தவர் வேத் லட்சுமி. அவர் வாழ்க்கையில் நடந்த சோகத்தை கண்ணீர் மல்க கூறியது: எனக்கு 23 வயதாகும் வரை என் பெற்றோர்கள் ஒன்றாகவே வாழ்ந்து வந்தனர். அதன்பின் அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையால் இருவரும் தனித்தனியாக வாழத்தொடங்கினர். சமீபத்தில் நான் என் தந்தையுடன் என் பட்டப்படிப்பு சான்றிதழை வாங்க பெல்காம் சென்றிருந்தபோது ரயிலில் பயணம் செய்தோம். என் தந்தையுடன் பயணம் செய்வதால், நான் பணத்தையும் எடுத்துச்செல்லவில்லை. என்னிடம் இருந்ததெல்லாம் நான் அணிந்திருந்த கோல்ட் செயின் மட்டும் தான். நாங்கள் பாதிதூரம் சென்றபோது என் அப்பா என்னை முற்றிலுமாக தவிர்க்கத்தொடங்கினார். என் அப்பாவும் அம்மாவும் பிரிந்து வாழத்தொடங்கிய போது நான் என் அம்மாவிற்கு ஆதரவாக இருந்தேன் என்பதால் என்மீது கோபத்தை வெளிப்படுத்தினார்.
கோபத்தின் உச்சிக்கு சென்றவர், என்னை ரயிலில் உதைத்தார். என் அப்பா என்னை மிகவும் மோசமாக நடத்தினார். இந்த உலகத்திலேயே எனக்கு மிகவும் பிடித்தமான நபரான என் அப்பா தான். ஆனால் அவர் என்னை விரும்பவில்லை. அந்த பயணத்தின்போது நான் பல பிரச்சனைகளை சந்தித்தேன். நான் மங்களூரில் இறங்கவேண்டும், இதற்கிடையில் காசர்கோட்டில் இறங்க வேண்டிய ஒரு சக பயணி, நான் அழுதுக்கொண்டிருப்பதை பார்த்து, நான் ரயிலிலிருந்து குதித்துவிடுவேனோ என்று பயந்து காசர்காட்டில் இறங்காமல் மங்களூர் வரை என்னுடன் வந்தார். அந்த பயணம் என் வாழ்க்கையை மாற்றியது. நான் என் அம்மாவையும் தங்கையையும் மட்டுமே மனதில் கொண்டு என் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன் என்றார்.