ரூ.15 கோடி சம்பளம் வாங்கினேனா? நெட்டிசன்களுக்கு மமிதா பைஜூ பதிலடி
சென்னை: தமிழில் `டியூட்’, ‘ஜன நாயகன்’, ‘சூர்யா 46’, ‘தனுஷ் 54’, விஷ்ணு விஷாலுடன் ‘இரண்டு வானம்’, மலையாளத்தில் ‘பெத்லேகம் குடும்ப யூனிட்’ என்று, கைவசம் 6 படங்கள் வைத்திருக்கிறார் ‘பிரேமலு’ மமிதா பைஜூ. அவர் பிரதீப் ரங்கநாதன் ஜோடியாக நடித்துள்ள `டியூட்’ என்ற படம் இன்று திரைக்கு வருகிறது. இந்நிலையில் ‘டியூட்’ படத்திற்காக மமிதா 15 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக அதிகம் பேசப்பட்டது. இந்நிலையில், தற்போது இதுகுறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது: என்னைப்பற்றி நான் கேட்ட மிகப்பெரிய வதந்தி சமீபத்தில் வந்த 15 கோடி ரூபாய் சம்பளம் தான். அவர்கள் இப்படி ஏதாவது ஒன்றை பதிவிடுவார்கள். சும்மா ஒரு எண்ணைப் போடுகிறார்கள். மமிதா ஒரு பதினைந்து கோடி வாங்குவார், இருக்கட்டும் என்று நினைத்திருப்பார்கள். அதன் கீழே வரும் கமெண்ட்களை பார்க்க வேண்டும். இவளுக்கெல்லாம் 15 கோடி சம்பளமா? என்பது போல இருக்கும். யாரோ செய்த தவறுக்கு பழி முழுவதும் நமக்குத்தான். இவ்வாறு மமிதா கூறியுள்ளார்.