தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

வீரவணக்கம்: விமர்சனம்

தமிழகத்திலுள்ள கிராமத்தில் வசிக்கும் மிகப்பெரிய செல்வந்தரும், கம்யூனிஸ்ட்டுமான பரத், ஊர் மக்களுக்கு உதவி செய்கிறார். பக்கத்து கிராமத்தில் சாதி வன்கொடுமை பிரச்னையால் பாதிக்கப்படும் ஏழை மக்களுக்கு உதவும் அவர், அவர்களை கேரளாவுக்கு அழைத்துச் சென்று, கம்யூனிச போராளியும் மற்றும் புரட்சிப் பாடகியுமான பி.கே.மேதினி அம்மாவை சந்திக்க வைக்கிறார். அப்போது புரட்சி வீரர் பி.கிருஷ்ண பிள்ளையின் வாழ்க்கை...

தமிழகத்திலுள்ள கிராமத்தில் வசிக்கும் மிகப்பெரிய செல்வந்தரும், கம்யூனிஸ்ட்டுமான பரத், ஊர் மக்களுக்கு உதவி செய்கிறார். பக்கத்து கிராமத்தில் சாதி வன்கொடுமை பிரச்னையால் பாதிக்கப்படும் ஏழை மக்களுக்கு உதவும் அவர், அவர்களை கேரளாவுக்கு அழைத்துச் சென்று, கம்யூனிச போராளியும் மற்றும் புரட்சிப் பாடகியுமான பி.கே.மேதினி அம்மாவை சந்திக்க வைக்கிறார். அப்போது புரட்சி வீரர் பி.கிருஷ்ண பிள்ளையின் வாழ்க்கை சம்பவங்கள் மற்றும் கேரளாவில் கம்யூனிச புரட்சி ஏற்பட்டது குறித்து அவர் உருக்கமாக விவரிக்கிறார்.

கேரள மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவிய முதல் செயலாளரும், புரட்சி வீரருமான பி.கிருஷ்ண பிள்ளையின் வீரவாழ்க்கை மற்றும் கேரளாவுக்கும், தமிழகத்துக்கும் அரசியல், பெண்கள் முன்னேற்றம், சமூக நீதி போராட்டங்கள் குறித்த ஒற்றுமையை படம் விவரிக்கிறது. இந்தியாவில் ‘வெள்ளையனே வெளியேறு’ முழக்கம் விஸ்வரூபம் எடுத்தபோது, கிராமங்களில் சர்வாதிகார செயல்களில் ஈடுபட்ட ஜமீன்தார்கள் எப்படி விவசாயிகளை கொத்தடிமைகளாக நடத்தினர் என்பதை சொல்லி கலங்க வைத்துள்ளனர். வரலாற்றை யதார்த்தமான படமாக இயக்கிய அனில் வி.நாகேந்திரன் பணி பாராட்டுக்குரியது. மக்களுக்காக போராடிய பி.கிருஷ்ண பிள்ளையின் கேரக்டருக்கு சமுத்திரக்கனி உயிரூட்டியுள்ளார். கம்யூனிஸ்ட் கேரக்டரில் பரத் சிறப்பாக நடித்துள்ளார்.

தனது மகளின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டும்போது கைத்தட்டல் பெறுகிறார். மற்றும் ரித்தேஷ், சுரபி லட்சுமி, பி.கே.மேதினி அம்மா, பரணி, ஐஸ்விகா, சித்திக், ஆதர்ஷ் தேவன், சித்தாங்கனா, பிரேம் குமார், சாதனா, ரமேஷ் பிஷாரடி, அரிஸ்டோ சுரேஷ், பீமன் ரகு, உல்லாஸ் பந்தளம், கோபிகா உள்பட அனைவரும் யதார்த்தமாக நடித்துள்ளனர். நடந்த காட்சிகளை கண்முன் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது, கவியரசுவின் ஒளிப்பதிவு. எம்.கே.அர்ஜுனன், பெரும்பாவூர் ஜி.ரவீந்திரநாத், ஜேம்ஸ் வசந்தன், சி.ஜே.குட்டப்பன், அஞ்சல் உதயகுமார் ஆகியோர் இசையில் கருத்தாழம் கொண்ட பாடல்களும், பின்னணி இசையும் படத்துக்கு உயிரூட்டியுள்ளது. நியாயமான மற்றும் அதிகாரத்துக்கு அடங்காத போராட்டமே வெல்லும் என்ற கருத்தை படம் அழுத்தமாக சொல்லியிருக்கிறது.