வயதுக்கான கமென்ட்டில் சிக்கிய சமீரா
திருமணமாகி ஒரு மகன், ஒரு மகளுக்கு தாயான சமீரா ரெட்டி, சில காலம் நடிக்காமல் இருந்தார். தற்போது 13 வருடங்களுக்கு பிறகு ‘சிம்னி’ என்ற இந்தி படத்தில் நடிக்கும் அவர், தனது மறுபிரவேசம் குறித்து கூறுகையில், ‘நான் நடித்த ‘டெஸ்’ என்ற படத்தை பார்த்த என் மகன், ‘ஏன் அம்மா நீ நடிக்கவில்லை?’ என்று கேட்டான். ‘உன்னையும், உன் சகோதரியையும் கவனித்துக் கொள்வதற்காகவே நடிக்கவில்லை’ என்றேன். அதற்கு அவன், ‘மறுபடியும் நடிப்பது குறித்து நீ மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என்றான். அதற்கு பிறகுதான், மீண்டும் நடிக்க வேண்டும் என்ற ஐடியா வந்தது. 13 வருடங்கள் கழித்து மீண்டும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்றபோது பதற்றமாக இருந்தது. அங்கு என்னை பார்த்தவர்கள், எனக்கு அதிக வயதாகிவிட்டதாக கமென்ட் செய்தனர். ‘அப்படி என்ன வயதாகிவிட்டது?’ என்று கேட்டேன்.
அப்போது டைரக்டர் `ஆக்ஷன்’ என்று சொன்னபோது, எனக்குள் இருந்த ஒரு நடிகை எழுந்து வந்தாள். இயக்குனர் எதிர்பார்த்தபடி திருப்திகரமாக நடித்தேன். எனக்கு 46 வயது. உடல் எடை பிரச்னையால் அவதிப்பட்ட நான், அதிலிருந்து மீண்டு வந்துள்ளேன். மும்பை வாழ்க்கை முறை பிடிக்காமல், கொரோனா காலத்தில் கோவாவில் எனது குடும்பத்தினருடன் குடியேறினேன். இங்கு வந்த பிறகு மன அழுத்தம் குறைந்து நிம்மதி ஏற்பட்டுள்ளது. எனது வாழ்க்கையிலும் நிறைய மாற்றங்கள் நடந்துள்ளது. அதிக மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். கோவா வாழ்க்கை என்னை மாற்றிவிட்டது. ஒரு தாயாக என்னையும், எனது குடும்பத்தினரையும் மகிழ்ச்சியுடன் வைத்துக்கொள்வது முக்கியம். அவர்களுக்காகத்தான் நான் வாழ்ந்து வருகிறேன்’ என்றார்.