விபத்து குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சஞ்சய் தத்
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் பலத்த படப்பிடிப்பில் விபத்தில் சிக்கி காயமடைந்ததாக வெளியான தகவலை தொடர்ந்து, இந்த தகவல் முற்றிலும் வதந்தி என தெளிவுபடுத்தியுள்ளார். கன்னட திரையுலகில் கேஜிஎஃப் படத்தின் மூலம் பிரபலமான சஞ்சய் தத், இந்த படத்தை தொடர்ந்து தற்போது இயக்குனர் பிரேம் இயக்கத்தில், கன்னட நடிகர் துருவா சர்ஜா நடித்து வரும் 'கேடி' படத்தில் நடித்து வருகிறார். உண்மை கதையை மையமாக வைத்து, பீரியாடிக் படமாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு, பெங்களூருவில் உள்ள மகடி சாலையில் படமாக்கப்பட்டு வந்த நிலையில் இதில் ஹீரோ துருவா சர்ஜா மற்றும் வில்லன் சஞ்சய் தத் ஆகியோர், மோதும் சண்டை காட்சி படமாக்கப்பட்ட போது சஞ்சய் தத் விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியானது.
இந்த சண்டை காட்சியை, ஸ்டண்ட் இயக்குனர் ரவி வர்மா இயக்கி வந்ததாகவும். இந்த சண்டை காட்சியில் போது, படப்பிடிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் டம்மி குண்டுகள் வெடித்தததில், சஞ்சய் தத்தின் முகம், கை மற்றும் முழங்கை பகுதியில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதோடு, காயமடைந்த சஞ்சய் தத்துக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர், மேல் சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள, முன்னணி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.
சஞ்சய் தத் தற்போது விஜய் நடித்து வரும், லியோ படத்திலும் நடித்து வருவதால் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் இந்த விபத்து குறித்து, படக்குழு தரப்பில் இருந்து உறுதி செய்யப்படாத நிலையில், சற்று முன் இந்த விபத்து குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார் சஞ்சய் தத். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "எனக்கு காயம் ஏற்பட்டதாக செய்திகள் வருகின்றன. அவை முற்றிலும் ஆதாரமற்றவை என்பதை நான் கூற விரும்புகிறேன். கடவுள் அருளால் நான் நலமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறேன். நான் கேடி படத்தின் ஷூட்டிங்கில் இருக்கிறேன், என்னுடைய காட்சிகளை படமாக்கும்போது படக்குழுவினர் மிகவும் கவனமாக இருக்கிறார்கள். இது தொடர்பாக என்னை நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.