நிறத்தை வைத்து கிண்டல் செய்யப்பட்ட சேஷ்விதா
விஜய் ஆண்டனியின் ‘மார்கன்’ படத்திலும், விமலின் ‘பரமசிவன் பாத்திமா’ படத்திலும் சிறப்பாக நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்தவர், சேஷ்விதா கனிமொழி. தற்போது ‘குற்றம் புதிது’ என்ற படத்தில், மதுசூதன ராவ் மகளாக நடித்துள்ளார். நாளை இப்படம் திரைக்கு வருகிறது. இதுகுறித்து அவர் கூறுகையில், ‘எனக்கு பவர்ஃபுல் கேரக்டரை கொடுத்து ரசிகர்களிடம் அன்பையும், அடையாளத்தையும் பெற்றுத்தந்த விஜய் ஆண்டனிக்கு நன்றி. இயக்குனர் லியோ ஜான் பாலுக்கும் நன்றி. யாராவது என்னை அடையாளம் கண்டுபிடித்து, ‘வெண்ணிலா’ என்று அப்படத்தில் நான் ஏற்றிருந்த கதாபாத்திரத்தின் பெயரில் அழைக்கும்போது மிகவும் சந்தோஷமாக இருக்கும்.
அதுபோல், ‘குற்றம் புதிது’, ‘பரமசிவன் பாத்திமா’ ஆகிய படங்களிலும் எனது நடிப்புத்திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி’ என்றார். சோஷியல் மீடியாவில் நாள்தோறும் தனது போட்டோக்களை பதிவிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வரும் அவர், தன்னை சில்க் ஸ்மிதாவுடன் ஒப்பிட்டு பலர் பேசுவதை பாசிட்டிவ்வாக எடுத்துக்கொள்வதாக சொன்னார். பெற்றோர் சேலத்தை சேர்ந்தவர்கள் என்றாலும், சேஷ்விதா கனிமொழி பெங்களூருவில் பிறந்து வளர்ந்த தமிழ் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. நடிக்க வந்த புதிதில் அவரது நிறத்தை வைத்து சிலர் கிண்டல் செய்திருக்கின்றனர்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்றால் சிவப்பாக இருக்க வேண்டும் என்றும், சிவப்பாக இல்லாத என்னால் ஜெயிக்க முடியாது என்றும் சிலர் சொன்னார்கள். ஆனால், சினிமாவில் ஜெயிக்க நிறத்தைவிட திறமைதான் முக்கியம் என்று தமிழ் ரசிகர்கள் எனக்கு நல்ல அங்கீகாரம் கொடுத்துள்ளனர்’ என்றார்.