ஒரிஜினல் கிளைமாக்சுடன் ‘ஷோலே’ வெளியீடு
கடந்த 1975 ஆகஸ்ட் 15ம் தேதி திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றிபெற்ற படம், ‘ஷோலே’. அமிதாப் பச்சன், தர்மேந்திரா, சஞ்சீவ் குமார் நடிப்பில் வெளியான இப்படத்தை ரமேஷ் சிப்பி இயக்கினார். கல்ட் கிளாசிக் படம் என்றும், இந்திய சினிமாவின் பென்ச் மார்க் படம் என்றும் ரசிகர்கள் கொண்டாடி வரும் இப்படம் திரைக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், தற்போது சிட்னியில் நடக்கும் இந்திய சர்வதேச திரைப்பட திருவிழாவில் ‘ஷோலே’ படம் திரையிடப்படுகிறது. ஆனால், ‘ஷோலே’ படத்தில் இதுவரை பார்த்த கிளைமாக்ஸ் இடம்பெறாது. இப்படத்துக்காக முதலில் படமாக்கப்பட்ட ஒரிஜினல் கிளைமாக்ஸ் இடம்பெறுகிறது.
இத்தகவலை சிட்னி இந்திய சர்வதேச திரைப்பட குழு இயக்குனர் தெரிவித்தார். இப்படம் தயாரானபோது, இதில் முன்னாள் போலீஸ் அதிகாரியாக நடித்த சஞ்சீவ் குமார், வில்லனாக நடித்த அம்ஜத் கானை சுட்டுக் கொல்வது போல் கிளைமாக்ஸ் படமாக்கப்பட்டது. அப்போது எமர்ஜென்சி காலக்கட்டம் என்பதால், காவல்துறை அதிகாரி சட்டத்தை தனது கையில் எடுத்துக்கொள்வதை சென்சாரில் அனுமதிக்க முடியாது என்று மறுத்துவிட்டனர். தயாரிப்பாளர்களும் அதிருப்தி அடைந்து, வேறு கிளைமாக்சை படமாக்கும்படி ரமேஷ் சிப்பியை வலியுறுத்தினர். எனவே, அம்ஜத் கானை போலீசார் கைது செய்து சிறையில் அடைப்பது போல் அந்த கிளைமாக்ஸ் மாற்றப்பட்டது. இந்நிலையில், ஒரிஜினல் கிளைமாக்சுடன் ‘ஷோலே’ படம் திரையிடப்படுகிறது.