படப்பிடிப்பில் மாடு தாக்கி ஹீரோ படுகாயம்
சென்னை: கிராமத்து வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் படம் ‘வட மஞ்சுவிரட்டு’. நாயகனாக ‘முருகா’ அஷோக் நடித்திருக்கிறார். இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் சங்கிலி.சிபிஏ. அழகர் பிக்சர்ஸ் சார்பில் புதுகை ஏ.பழனிச்சாமி இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு திண்டுக்கல் அஞ்சுகுளிப்பட்டி என்கிற கிராமப் பகுதியில் நடந்த போது காளையுடன் கதாநாயகன் ‘முருகா’ அஷோக் நடிக்க வேண்டிய காட்சி.
அப்போது காளை எதிர்பாராத வகையில் தன் பெரிய கொம்புகளால் ‘முருகா’ அஷோக்கைத் தூக்கி வீசியது. நிலைதடுமாறி கீழே விழுந்த அவருக்கு வயற்றுலிருந்து மார்பு வரை காயங்கள் ஏற்பட்டது. இதனால் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். காயத்தைப் பொருட்படுத்தாமல் சிகிச்சைக்குப் பின் அடுத்த நாளே அஷோக் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இந்த விபத்து பற்றி நாயகன் அஷோக் கூறும்போது, ‘‘அந்த காளையின் பெயர் பட்டாணி.
அது என்னுடன் நல்ல பழக்கத்தில் தான் இருந்தது. அதைத் தொட்டு தடவி நெற்றியிலெல்லாம் முத்தமிட்டு இருக்கிறேன். ஆனால் அதற்கு அன்று என்ன ஆனது எனத் தெரியவில்லை. என்னை தாக்கி விட்டது. மருத்துவரிடம் சென்ற போது குத்து சற்று ஓரங்குலம் நகர்ந்து இருந்தால் மார்பில் தாக்கியது நுரையீரலைக் கிழித்திருக்கும்’’ என்றார்.