உயரம் குறைவான ஹீரோக்கள் ஸ்டூலில் நிற்பார்களா..? கிரித்தி சனோன் பதிலால் மகேஷ் பாபு ரசிகர்கள் கோபம்
மும்பை: முன்னணி நடிகைகளில் ஒருவரான கிரித்தி சனோன், தனது பட ஹீரோக்களின் உயரம் பற்றி சொல்லியிருக்கும் பதில், மகேஷ் பாபுவின் ரசிகர்களை கோபப்படுத்தியுள்ளது. பாலிவுட்டிலுள்ள உயரமான நடிகைகளில் ஒருவர், கிரித்தி சனோன். அவரது உயரம் 5.8 அடி. இந்நிலையில் அவரிடம், ‘உங்களை விட உயரம் குறைவான ஹீரோக்களுடன் நடித்திருக்கிறீர்களா?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‘பெரும்பாலும் எனது பட ஹீரோக்கள், என்னைவிட உயரம் குறைவாகத்தான் இருப்பார்கள்.
பிரபாஸ், கார்த்திக் ஆர்யன் ஆகியோர் என்னைவிட உயரமான ஹீரோக்கள். ஆனால், உயரம் முக்கியம் இல்லை. கெமிஸ்ட்ரிதான் முக்கியம்’ என்றார். ‘உங்களின் உயரத்துக்கு ஏற்ப அவர்கள் ஸ்டூலில் நிற்பார்களா?’ என்று தொடர்ந்து கிரித்தி சனோனிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‘அதை நாங்கள் பார்த்துக் கொள்வோம். அவர்கள் ஹீல்ஸ் ஷூக்கள் அணிவது கூட நடக்கும். ஆனால், உயரம் எப்போதுமே ஒரு பெரிய விஷயம் இல்லை’ என்றார்.
கிரித்தி சனோனின் பேட்டியை பார்த்த மகேஷ் பாபுவின் ரசிகர்கள் கோபத்துக்குள்ளாகி, அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ‘உங்களின் முதல் படமான ‘1: நேனோக்கடைன்’ ஹீரோ மகேஷ் பாபு, உங்களைவிட உயரமானவர். முதல் பட ஹீரோவையே மறந்துவிட்டீர்களா?’ என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
