எவ்வளவு போராடியும் மீட்க முடியவில்லை: ஸ்ரேயா கோஷல் வேதனை
மும்பை: மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரேயா கோஷல், பல்வேறு ெமாழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். இசை நிகழ்ச்சிகளும் நடத்தி வருகிறார். அவருக்கு பல வாய்ப்புகள் வந்தும், சினிமாவில் நடிக்க மறுத்துவிட்டார். அவரது எக்ஸ் தளத்தில் 69 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். சமீபத்தில் உடல் பருமன் பிரச்னைக்கு எதிராக, 10 சதவீதம் எண்ணெயை குறைப்போம் என்ற விழிப்புணர்வு பிரசாரத்துக்காக பிரதமர் நரேந்திர மோடி 10 பேரை தேர்வு செய்தார். அதில் ஸ்ரேயா கோஷலும் ஒருவர்.
இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் ஸ்ரேயா கோஷல் வெளியிட்டுள்ள பதிவில், ‘எனது எக்ஸ் தளம் கடந்த 13ம் தேதி முதல் முடக்கப்பட்டுள்ளது. இதைச் சரிப்படுத்த எக்ஸ் தள குழுவினரை தொடர்புகொள்ள முயற்சித்தேன். ஆனால், தானியங்கி முறையில் வரும் பதில்களைத் தவிர எந்த உதவியும் கிடைக்கவில்லை. எனது கணக்கை நீக்கவும் முடியவில்லை, உள்ளே நுழையவும் முடியவில்லை.
எனவே, தயவுசெய்து எனது ‘எக்ஸ்’ பக்கத்தில் இருந்து வரும் எந்த லிங்க்கையும் கிளிக் செய்ய வேண்டாம், எந்தச் செய்தியையும் நம்ப வேண்டாம், அனைத்தும் போலி மற்றும் மோசடி செய்திகளாக இருக்கும். எனது தளம் மீட்கப்பட்ட பிறகு தகவல் சொல்கிறேன்’ என்று வேதனையுடன் கூறியுள்ளார். கடந்த 6ம் தேதிக்குப் பிறகு அவரது எக்ஸ் தளத்தில் இருந்து எந்தப் பதிவும் வெளியாகவில்லை.