டாக்டர் படிப்பை விட்டு நடிக்க வந்தது ஏன்? சித்தார்த்தா சங்கர்
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மதராசி’ படத்தில் துப்பாக்கியை எடுத்து சித்தார்த்தா சங்கரிடம் கொடுக்கும் காட்சி இருக்கும். திரையில் இந்த காட்சி வரும்போது அரங்கத்தில் பார்வையாளர்களின் கவனம் சித்தார்த்தா சங்கர் பக்கம் திரும்பும். இப்படி பல படங்களில் பல்வேறு கேரக்டர்களில் நடித்து கவனம் பெற்ற நடிகரான இவர் இப்போது பாலிவுட்டிலும் கால் பதித்து விட்டார். தனது திரையுலக பயணம் மற்றும் எதிர்கால திட்டம் குறித்து அவர் அளித்த பேட்டியில், ‘‘நான் மலேசியாவில் பிறந்து வளர்ந்து மருத்துவ படிப்பு படித்துக் கொண்டிருந்தேன். சினிமா மீது கொண்ட ஆசையால் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சென்னை வந்து வாய்ப்பு தேடினேன்.
விஜய் ஆண்டனி மூலமாக ‘சைத்தான்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு ‘சத்யா’, ‘கடாரம் கொண்டான்’, ‘கொலை’, ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்திலும் நடித்தேன். நடிகர் நாசரிடம் நடிப்பு பயிற்சி பெற்றதன் விளைவாக படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் இப்போது மூன்று தமிழ் படங்களில் நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும். இந்தியில் ஜான்வி கபூருடன் பரம் சுந்தரி படத்தில் நடித்தேன். பெரிய குடும்பத்தில் இருந்து நடிக்க வந்தது அவருக்கு அதிகளவு அழுத்தமாக இருக்கும். ஆனால் அதை அவர் சிறப்பாக கையாள்கிறார். அவரிடம் அவரது அம்மா ஸ்ரீ தேவி பற்றி நிறைய பேசினேன். தமிழில் ரஜினி, கமல், அஜித் ஆகியோருடன் நடிக்க ஆவலாக இருக்கிறேன்’’ என்றார்.