அக்கா - தம்பியாக அருள்நிதி, மம்தா நடிக்கும் மை டியர் சிஸ்டர்
சென்னை: அருள்நிதி மற்றும் மலையாள நடிகை மம்தா மோகன்தாஸ் இணைந்து நடித்துள்ள படத்துக்கு ‘மை டியர் சிஸ்டர்’ என பெயரிடப்பட்டுள்ளது. ‘என்னங்க சார் உங்க சட்டம்’ படத்தை இயக்கிய பிரபு ஜெயராம் இப்படத்தை இயக்கியுள்ளார். இதில் மம்தா மோகன்தாஸ் அருள்நிதிக்கு அக்காவாக நடிக்கிறார். இவர்கள் இருவரும் நடித்துள்ள புரோமோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இதனை படப்பிடிப்புக்கு இடையே காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.
கதை சார்ந்த படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அருள்நிதி மற்றும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் மம்தா மோகன்தாஸ் இருவரும் அண்ணன் - தங்கை கதாபாத்திரத்தில் உணர்வுப்பூர்வமாக நடித்துள்ளனர். ‘மை டியர் சிஸ்டர்’ படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் கோல்ட் மைன்ஸ் நிறுவனம் சார்பில் சுதன் சுந்தரம், மனிஷ் ஷா இணைந்து தயாரித்துள்ளனர்.
இப்படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக மீனாட்சி கோவிந்தராஜன் மற்றும் அருண் பாண்டியன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. வெற்றிவேல் ஒளிப்பதிவு செய்து, நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைத்துள்ளார். முழுவதும் காமெடி எமோஷன் பாணியில் இப்படத்தினை உருவாக்கி இருக்கிறார்கள். இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
படம் குறித்து இயக்குனர் பிரபு ஜெயராம் பேசியதாவது, ‘‘ஆணாதிக்கவாதியான பச்சை கிருஷ்ணனுக்கும் பெண்ணியவாதியான அவனது அக்கா நிர்மலா தேவிக்கும் இடையிலான கருத்து முரண்பாடுகள்தான் இந்தக் கதை. இந்த விஷூவல் புரோமோ உருவாவதற்கு பின்னால் செட்டில் அருள்நிதி மற்றும் மம்தா மோகன்தாஸின் ஜாலியான பல தருணங்களை கொண்டே உருவாக்கினோம். திரையிலும் இவர்களது காம்பினேஷன் அனைவருக்கும் பிடித்தமானதாக இருக்கும்” என்றார்.
