சிவாஜி, அமிதாப், ரஜினி, கமல் படங்களின் ஒளிப்பதிவாளர் பாபு மாரடைப்பால் மரணம்
சென்னை: பிரபல ஒளிப்பதிவாளர் பாபு (88) என்கிற அனந்த கிருஷ்ணன், வயது முதிர்வு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டை தனியார் மருத்துவமனையில் நேற்று காலை 7.40 மணியளவில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது இறுதிச்சடங்கு இன்று பெசன்ட் நகர் மின்மயானத்தில் நடக்கிறது. அவரது மனைவி ஏற்கனவே காலமாகி விட்டார். 2 மகன்கள் இருக்கின்றனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் 108 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவு செய்துள்ள பாபு, எஸ்.பி.முத்துராமன் இயக்கிய 45 படங்களுக்கும், ரஜினிகாந்த் நடித்த 27 படங்களுக்கும், கமல்ஹாசன் நடித்த 12 படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். எஸ்.பி.முத்துராமன் இயக்கிய ‘கனிமுத்து பாப்பா’ என்ற படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். தமிழில் ரஜினிகாந்த் நடித்த ‘ராணுவ வீரன்’, ‘கழுகு’, ‘ஆறிலிருந்து அறுபதுவரை’, ‘போக்கிரி ராஜா’, ‘பாயும் புலி’, ‘நான் மகான் அல்ல’, கமல்ஹாசன் நடித்த ‘சகலகலா வல்லவன்’, ‘தூங்காதே தம்பி தூங்காதே’ உள்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழக அரசு விருதுகள் மற்றும் கலைமாமணி விருது பெற்றுள்ளார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.