ரவி மோகனிடம் வாய்ப்பு கேட்ட சிவகார்த்திகேயன்
ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்ற திரைப்பட மற்றும் வெப்தொடர் தயாரிப்பு நிறுவனத்தை ரவி மோகன் தொடங்கி இருக்கிறார். இதற்கான விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், ‘ஒரு தயாரிப்பு நிறுவனம் என்பது, பல கனவுகளை திரையில் கொண்டு வரும் மிகப்பெரிய பொறுப்பாகும். அவ்வளவு பிரஷருடன் செய்யும் வேலை அது. ‘பராசக்தி’ படத்தில் நடிக்கும்போது ரவி மோகனுடன் அதிகமாக பேசி பழகுவதற்கான வாய்ப்பு அமைந்தது. கனவு, பேஷன் உள்பட அனைத்துக்கும் ஒரு வடிவம் கொடுப்பதற்காக எல்லா விஷயங்களையும் ரவி மோகன் செய்கிறார். அவர் தயாரிக்க, கார்த்திக் யோகி இயக்கும் ‘ப்ரோ கோட்’ என்ற படம், நல்ல பொழுதுபோக்கு படமாக இருக்கும்.
யோகி பாபுவை ஹீரோவாக வைத்து ரவி மோகன் இயக்கும் ‘அன் ஆர்டினரி மேன்’ என்ற படமும் மிகவும் வித்தியாசமாக இருக்கும். ஒரு ஹீரோ, இயக்குனராக வேண்டும் என்று நினைப்பதே மிகப்பெரிய முடிவுதான். சிறுவயதில் இருந்தே அவர் சினிமா குடும்பத்தை பார்த்து வளர்ந்தால் இந்த முடிவை அவரால் நம்பிக்கையோடு எடுக்க முடிந்திருக்கிறது. ஒருசில நடிகர்களுக்கு இயக்குனராகும் குவாலிட்டி இருக்கும். அது ரவி மோகனுக்கு இருக்கிறது. கார்த்திக்கிற்கும் அந்த குவாலிட்டி இருக்கிறது. ஆனால், எனக்கு அந்த குவாலிட்டி இல்லை. நான் தயாரிக்கும் படங்கள் கொடுக்கும் சந்தோஷத்தை நான் நடிக்கும் படங்கள் கொடுப்பது இல்லை.
அதாவது, நான் தயாரிக்கும் படங்களில் கிடைக்கும் சுதந்திரமும், நான் கற்றுக்கொள்ளும் விஷயமும், நான் நடிக்கும் படத்தில் 100 சதவீதம் கிடைப்பது இல்லை’ என்றார். மேலும், தன்னை வைத்து ரவி மோகன் படம் தயாரிக்க வேண்டும். அதற்கு இப்போதே அட்வான்ஸ் கொடுத்தால் வாங்க தயாராக இருப்பதாக சிவகார்த்திகேயன் பேசினார். உடனே ரவி மோகன், உங்களுக்கு சம்பளம் கொடுக்கும் அளவுக்கு நான் வெற்றிகரமான தயாரிப்பாளராக மாறிய பிறகு படம் தயாரிக்கிறேன் என்று சொன்னார்.