எஸ்.பி.பி சொன்ன அட்வைஸ்: பாடகர் மனோ நெகிழ்ச்சி
சென்னை: கொடைக்கானலில் வட்டக்கானல் பகுதியில் போதை காளானால் ஏற்பட்ட உண்மை சம்பவத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள படம், ‘வட்டக்கானல்’. இதை எம்பிஆர் பிலிம்ஸ், ஸ்கைலைன் சினிமாஸ் இணைந்து தயாரித்துள்ளது. பித்தாக் புகழேந்தி எழுதி இயக்கியுள்ளார். பாடகர் மனோவின் மகன் துருவன் மனோ, மீனாட்சி கோவிந்தராஜன், ஆர்.கே.சுரேஷ், பாடகர் மனோ, ‘கபாலி’ விஷ்வந்த் நடித்துள்ளனர். டாக்டர் ஏ.மதியழகன், ஆர்.எம்.ராஜேஷ் இணைந்து தயாரித்துள்ளனர்.
எம்.ஏ.ஆனந்த் ஒளிப்பதிவு செய்ய, மாரிஸ் விஜய் இசை அமைத்துள்ளார். அடுத்த மாதம் படம் திரைக்கு வருகிறது. இதுகுறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் பாடகர் மனோ நெகிழ்ச்சியுடன் பேசினார். அவர் கூறுகையில், ‘பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் என்னிடம், ‘நாம் கஷ்டப்பட்டு பாடி சம்பாதித்த பணத்தை நம்முடைய பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு பயனுள்ள முறையில் செலவழிக்க வேண்டும்.
அவர்களுக்கு என்ன துறை பிடிக்கிறதோ, அதில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும். அதை மீறி அவர்கள் சினிமா துறைக்கு வந்தால், கூடவே இருந்து பார்த்துக்கொள்’ என்று அட்வைஸ் செய்தார். அதை இன்றளவும் கடைப்பிடித்து வருகிறேன். எனது மகன் துருவன் நடிக்க வந்தபோது எஸ்.பி.பியின் அட்வைசை ஞாபகப்படுத்தினேன். இதில் அவன் சிறப்பாக நடித்துள்ளான்’ என்றார்.