ஸ்ரீக்காக விலகிய லோகேஷ் கனகராஜ்
சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ஸ்ரீயின் வீடியோ வெளியாகி பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் பதற்றம் அடைந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உள்பட சிலர் உடனே ஸ்ரீயை மீட்டு, அவருக்கான சிகிச்சையை அளித்து குணப்படுத்தினர். இதுகுறித்து லோகேஷ் கனகராஜ் அளித்துள்ள பேட்டியில், ‘தற்போது ஸ்ரீ நலமாக இருக்கிறான். ஒருநாள் வீடியோகாலில் பேசிய அவன், ஒரு புத்தகத்தை வெளியிடுவதாக சொன்னான். திட்டமிட்டு செய்யலாமே என்று நான் சொல்ல, உடனே வெளியிட வேண்டும் என்றான். சரி என்று சொல்லிவிட்டேன்.
இன்ஸ்டாகிராமில் ரீல் பதிவிட்டதற்கு, ‘இவர்கள் ஸ்ரீயை கவனிக்காமல் விட்டுவிட்டனர்’ என்று என்னையும் சேர்த்து திட்டினார்கள். இதுபோன்ற காரணங்களுக்காகவே நான் சமூக வலைத்தளத்தில் இருந்து விலகியிருக்கிறேன். தினமும் காலையில் எழுந்ததும், அனைத்து விஷயங்களுக்கும் நான் விளக்கம் அளிக்க முடியாது. ஸ்ரீயை பற்றி பேச ஏன் தயங்குகிறேன் என்றால், அது அவனது வாழ்க்கை. அவனுக்கு ஒரு குடும்பம் இருக்கிறது. ஸ்ரீ என் நண்பனாக இருந்தாலும் அவனும், நானும் கேமரா முன்னால் அமர்ந்து பேச முடியாது. அவனும், அவனது குடும்பமும் எவ்வளவு கஷ்டப்படுகின்றனர் என்று வெளியே சொல்ல முடியாது. ஸ்ரீயின் பிரச்னையை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். அதுபற்றி வெளியே சொல்ல மாட்டோம். என்னையும், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவையும் திட்டினார்கள். எங்களால் முடிந்த எல்லா உதவிகளையும் செய்து வருகிறோம். நாளை என்ன நடக்கும் என்று யாராலும் கணிக்க முடியாது’ என்றார்.