ஸ்ரீதேவி பேச்சை மீறிய ஜான்வி கபூர்
பாலிவுட் படங்களை தொடர்ந்து, தென்னிந்திய மொழியில் ‘தேவரா’ என்ற தெலுங்கு படத்துக்கு பிறகு ‘பெத்தி’ என்ற படத்தில் நடித்து வரும் ஜான்வி கபூர், தனது தாயார் ஸ்ரீதேவியின் வழிகாட்டுதலில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்துகொண்டதாக தெரிவித்துள்ளார். எதையும் வெளிப்படையாக பேசக்கூடிய அவர், தனது காதலர் சிகர் பஹாரியாவையும் தன்னுடன் வெளியிடங்களுக்கு அழைத்து வருகிறார். இந்நிலையில் அவர் அளித்த பேட்டி வைரலாகியுள்ளது. அவர் கூறுகையில், ‘எப்படி தோற்றமளிக்க வேண்டும் என்பது தொடர்பாக சமூக ஊடகங்களில் வரக்கூடிய செய்திகளால் ஈர்க்கப்பட்டவர்களில் நானும் ஒருத்தி. ஆனால், இந்த ஆலோசனையை இளம்பெண்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் விரும்பவில்லை.
‘உங்களுக்கு மகிழ்ச்சியை தரும் எதை வேண்டுமானாலும் செய்யுங்கள்’ என்பதில் நான் அதிக நம்பிக்கை கொண்டவள். எல்லா விஷயத்திலும் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று விரும்புபவள். நான் மிகவும் புத்திசாலி, பழமைவாதி, மேலும், நான் செய்வது சரியானது என்று நினைப்பவள். எனக்கு என் அம்மா ஸ்ரீதேவியின் வழிகாட்டுதல் இருந்து வந்தது. நான் சினிமாவில் நடிப்பதை அவர் எப்போதுமே விரும்பியது இல்லை. என் மீதான பாதுகாப்பை பற்றி அவர் அதிகமாக சிந்தித்தார். எங்களுக்கு எல்லா வழியிலும் நாங்கள் விரும்பிய அனைத்தும் கிடைத்தது. அதே நேரத்தில், நான் நடிகையாகக்கூடாது என்பதில் அம்மா கண்டிப்புடன் நடந்துகொண்டார். அவரது பேச்சை மீறி இப்போது நான் சினிமாவில் நடித்து வருகிறேன்’ என்றார்.
