ஸ்ரீதேவியை டார்ச்சர் செய்த இயக்குனர்
கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டுக்கு சென்று, ‘நம்பர் ஒன்’ நடிகையாகவும், ரசிகர்களின் கனவுக்கன்னியாகவும் இருந்தவர், மறைந்த ஸ்ரீதேவி. எப்போதுமே தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்த அவர், திடீரென்று பலவீனமடைய அவர் கடைப்பிடித்த டயட் என்றும், அதற்கு இயக்குனர் ராம் கோபால் வர்மா கொடுத்த டார்ச்சர்தான் காரணம் என்றும் இணையதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியில் ஸ்ரீதேவியை வைத்து ‘சால்பாஸ்’ உள்பட பல படங்களை இயக்கியுள்ள பங்கஜ் பராஷர், இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ‘சால்பாஸ்’ படத்தில் ஸ்ரீதேவி இரட்டை வேடங்களில் நடித்தார். இரு ஹீரோக்களில் ஒருவராக ரஜினிகாந்த் நடித்தார். இப்படம் தமிழில் ‘அஞ்சு மஞ்சு’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.
இதையடுத்து பங்கஜ் பராஷர் இயக்கிய ‘மேரி பீவி கா ஜவாப் நஹின்’ என்ற படத்தில் அக்ஷய் குமார், ஸ்ரீதேவி நடித்தனர். அதேவேளையில், ராம் கோபால் வர்மா இயக்கத்திலும் ஸ்ரீதேவி நடித்தார். இப்படத்தின் கேரக்டருக்காக ஸ்ரீதேவி உடல் எடையை குறைப்பதற்கான டயட்டை கடைப்பிடிக்க ராம் கோபால் வர்மா தொடர்ந்து வற்புறுத்தியதால், ஸ்ரீதேவியின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. உப்பு குறைந்த டயட்டை மேற்கொண்டதால், ரத்த அழுத்தம் குறைந்து மயக்கம் அடைந்து, மேஜை மீது இடித்துக்கொண்டு கீழே விழுந்தார். முகத்தில் காயம் ஏற்பட்டு ஒரு பல் உடைந்தது. இதனால் அவர் சில காலம் நடிக்காமல் இருந்தார். இந்த காரணத்தால், குறித்த காலத்தில் ‘மேரி பீவி கா ஜவாப் நஹின்’ படப்பிடிப்பை முடிக்க முடியவில்லை. அதுவரை படமான காட்சிகளை தொகுத்து, கிளைமாக்சில், இதுதான் முடிவு என்று டைட்டிலில் அறிவித்து படத்தை வெளியிடும் நிலை ஏற்பட்டதாக, பங்கஜ் பராஷர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.