கதை அமைந்தால் கமலுடன் நடிப்பேன்: ரஜினி காந்த் பேட்டி
மீனம்பாக்கம்: கமலும், நானும் சேர்ந்து படம் பண்ணவேண்டும் என ஆசை உள்ளது. கதை, கதாபாத்திரம் கிடைத்தால் நடிப்போம் என சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்த் கூறியுள்ளார். ரஜினிகாந்த் நேற்று காலை, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், சென்னையில் இருந்து கோவை புறப்பட்டு சென்றார். அப்போது ரஜினிகாந்த், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ராஜ்கமல், ரெட் ஜெயிண்ட் சேர்ந்து, ஒரு படம் பண்ணப்போகிறோம். அந்த படத்திற்கு இன்னும் டைரக்டர் முடிவாகவில்லை. கமலும், நானும் சேர்ந்து படம் பண்ணவேண்டும் என்று எனக்கு ஆசை உள்ளது. அதற்கான கதை, கதாபாத்திரம் கிடைத்தால் நடிப்போம். பிரதமர் நரேந்திர மோடிக்கு, எனது பிறந்தநாள் வாழ்த்துகள். இவ்வாறு ரஜினிகாந்த் கூறியுள்ளார். கோவை விமான நிலையத்துக்கு சென்றதும் நிருபர்களிடம் ரஜினி கூறுகையில், ‘ஜெயிலர்- 2’ படப்பிடிப்புக்காக கேரளா செல்வதற்காக வந்துள்ளேன். 6 நாள் ஷூட்டிங் நடக்க உள்ளது. அடுத்தாண்டு ஜூன் மாதம் படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது’ என்றார். திரை கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? என்ற நிருபர்களின் கேள்விக்கு ‘நோ கமெண்ட்ஸ்’ என்ற பதிலளித்தவாறு அங்கிருந்து ரஜினி புறப்பட்டு சென்றார்.