தெரு நாயை டிரான்ஸ்பார்மரில் தூக்கி வீசி கொன்ற கொடூரம்: சோனம் பஜ்வா ஆவேசம்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், ஜெய்சிங்புரா பகுதியில் இருந்த தெரு நாய் ஒன்றை மர்ம நபர்கள் பிடித்து, அதன் கால்களை கட்டி, சுமார் 20 அடி உயரமுள்ள டிரான்ஸ்பார்மர் மீது வீசியுள்ளனர். இதில் மின்சாரம் தாக்கி, உடல் கருகிய நாய் பரிதாபமாக உயிரிழந்தது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், மின்சார வாரிய ஊழியர்களை வரவழைத்து மின் இணைப்பை துண்டித்தனர்.
15 நிமிட போராட்டத்துக்கு பின்பு, கருகிய நிலையில் இருந்த நாயின் உடலை மீட்டனர். அந்த நாயை பராமரித்து வந்த ராதே ஷ்யாம் என்பவர், சம்பவ இடத்துக்கு வந்து நாயின் உடலை பார்த்து கதறி அழுதது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்த கொடூர சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், நடிகை சோனம் பஜ்வா வெளியிட்டுள்ள பதிவில், ‘நாயை பராமரித்து வந்தவர் கதறி அழுதார்.
ஆனால், எந்த தேசிய ஊடகமும் இதை வெளியிடவில்லை. இதுவே ஒரு நாய் கடித்த வழக்காக இருந்திருந்தால், எல்லா தலைப்பு செய்தியிலும் இதுதான் இருந்திருக்கும். கொடூரத்துக்கு அங்கீகாரம் கிடைத்து, கருணை நசுக்கப்படும்போது இதுதான் நடக்கும்’ என்று வேதனையுடன் கூறியுள்ளார். தமிழில் வெளியான ‘கப்பல்’, ‘காட்டேரி’ போன்ற படங்களில் நடித்திருந்த சோனம் பஜ்வா, தற்போது பல்வேறு மொழிப் படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
