சுபத்ரா ராபர்ட் நடிக்கும் மெல்லிசை
சென்னை: ஒரு தந்தைக்கும், மகளுக்கும் இடையிலான அன்பை வெளிப்படுத்தும் படமாக உருவாகிறது, ஹேஷ்டேக் எஃப்டிஎஃப்எஸ் புரொடக்ஷன்சின் ‘மெல்லிசை’. இந்நிறுவனம் இதற்கு முன்பு தயாரித்து விருது பெற்ற ‘வெப்பம் குளிர் மழை’ என்ற படத்தை இயக்கிய திரவ் இப்படத்தை எழுதி இயக்குகிறார். இரு காலகட்டங்களில் மனிதர்களின் ஆழமான உணர்வுகள் பற்றி படம் பேசுகிறது. காதல், லட்சியம், தோல்வி, வெற்றி மற்றும் வாழ்க்கை சுழற்சி, மனித உறவுகளுக்கு இடையிலான புரிதல் என்று அனைத்தையும் கவிதையாக பேசுகிறது. தந்தை வேடத்தில் ‘ஆடுகளம்’ கிஷோர் நடிக்கிறார். முக்கிய வேடங்களில் சுபத்ரா ராபர்ட், ஜார்ஜ் மரியான், ஹரீஷ் உத்தமன், தனன்யா, ஜஸ்வந்த் மணிகண்டன், ப்ரோஆக்டிவ் பிரபாகர், கண்ணன் பாரதி நடிக்கின்றனர். தேவராஜ் புகழேந்தி ஒளிப்பதிவு செய்ய, சங்கர் ரங்கராஜன் இசை அமைக்கிறார். திரவ் பாடல்கள் எழுதுகிறார்.