சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாகும் டிசி
சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக அறிமுகமாகும் படத்துக்கு ‘டிசி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், முதல் முறையாக ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். இந்த படத்தின் அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நேற்று இணையதளத்தில் வீடியோவாக வெளியிட்டது. படத்துக்கு ‘டிசி’ என தலைப்பிட்டுள்ளனர்.
படத்தில் லோகேஷ் கனகராஜின் கேரக்டர் பெயர் தேவதாஸ். அவருக்கு ஜோடியாகும் வாமிகா கப்பியின் கேரக்டர் பெயர் சந்திரா. இந்த இரு கேரக்டர்களின் பெயர்களில் உள்ள முதல் எழுத்துகளை வைத்து ‘டிசி’ என படத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை சன் டிவி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் பிரமாண்டமாக தயாரிக்கிறார். ‘ராக்கி’, ‘சாணிக் காயிதம்’, ‘கேப்டன் மில்லர்’ படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார்.
அனிருத் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு, முகேஷ்.ஜி. படத்தொகுப்பு, பிரசன்னா ஜி.கே. இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாமிகா கப்பி, பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் தமிழில் ‘மாலை நேரத்து மயக்கம்’ படத்தில் நாயகியாக நடித்துள்ளார். மேலும், ‘இறவாக்காலம்’ மற்றும் ‘ஜீனி’ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். அப்படங்கள் இன்னும் வெளியாகவில்லை.
