தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

சன் நெக்ஸ்ட்டில் 10ம் தேதி ரிலீசாகிறது அருள்நிதி நடிக்கும் ராம்போ

சென்னை: தென்னிந்தியாவின் முன்னணி ஓடிடி தளங்களில் ஒன்றான சன் நெக்ஸ்ட், தனது அடுத்த நேரடி ஓடிடி வெளியீடாக ‘ராம்போ’ என்ற திரைப்படத்தை தீபாவளி சிறப்பு படமாக வரும் 10ம் தேதி ரிலீஸ் செய்கிறது. இதில் அருள்நிதி ஹீரோவாக நடித்துள்ளார். ‘கொம்பன்’, ‘குட்டிப்புலி’, ‘புலிக்குத்தி பாண்டி’, ‘விருமன்’ போன்ற அழுத்தமான கிராமப்புற கமர்ஷியல் படங்களை வழங்கிய இயக்குனர் முத்தையா, ‘ராம்போ’ படத்தை எழுதி இயக்கியுள்ளார்.

தனது வழக்கமான பாணியில் இருந்து விலகி, நகரத்து பின்னணியில் அதிரடி ஆக்‌ஷனுடன் கூடிய கமர்ஷியல் பொழுதுபோக்கு படமாக இதை அவர் உருவாக்கியுள்ளார். துணிச்சலான குத்துச்சண்டை வீரர் அருள்நிதி, தன்யா ரவிச்சந்திரனுக்கு உதவி செய்யும்போது தொடங்கும் கதை, பிறகு அருள்நிதியின் வாழ்க்கையில் நடக்கும் அதிரடி சம்பவங்களை மையப்படுத்தி நகர்கிறது.

இதுகுறித்து முத்தையா கூறுகையில், ‘இப்படம் எனது பாணியில் இருந்து மாறுபட்டு, ஒரு புதிய கதையை வேறொரு பாணியில் சொல்லும் வாய்ப்பை வழங்கியது. அருள்நிதியுடன் இணைந்து பணியாற்றியது மிகவும் உற்சாகமான ஒரு அனுபவமாக இருந்தது. ‘ராம்போ’ படத்தை கண்டிப்பாக ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்று நம்புகிறேன்’ என்றார். முக்கிய வேடங்களில் ஆயிஷா, ஹரீஷ் பெராடி, விடிவி கணேஷ் நடித்துள்ளனர்.

வில்லனாக மலையாள நடிகர் ரஞ்சித் சஜீவ் நடித்துள்ளார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டிரைலர் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருந்தது. தீபாவளி கொண்டாட்டத்தை வீட்டில் இருந்தபடியே அனுபவிக்க, வரும் 10ம் தேதி முதல் ‘ராம்போ’ படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் பார்த்து ரசியுங்கள் என்று, இயக்குனர் தரப்பு கூறியுள்ளது.