தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

கமலுக்கு ஆதரவாக கர்நாடக வர்த்தக சபைக்கு தமிழ் தயாரிப்பாளர்கள் கடிதம்

சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைஃப்’ படம் இன்று திரைக்கு வருகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கமல் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்றார். இதற்காக கமல் மன்னிப்பு கேட்டால் மட்டுமே படம் கர்நாடகத்தில் திரைக்கு வரும் என தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழ் நடப்பு திரைப்பட தயாரிப்பாளர்...

சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைஃப்’ படம் இன்று திரைக்கு வருகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கமல் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்றார். இதற்காக கமல் மன்னிப்பு கேட்டால் மட்டுமே படம் கர்நாடகத்தில் திரைக்கு வரும் என தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழ் நடப்பு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில், ‘‘தமிழ் மற்றும் கன்னடத் திரைப்படத் துறைகள் பல ஆண்டுகளாக இணைந்து செயல்பட்டு வருகிறது. கன்னடத்தைச் சேர்ந்த பல நடிகர்கள் தமிழில் நடிக்கிறார்கள். தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் கன்னடத் துறையில் படங்களைத் தயாரிக்கின்றனர். இரு திரைப்படத் துறைகளுக்கும் இடையே நிலவும் நல்லிணக்கத்தைப் பாதிக்கும் எந்தவிதமான ஒரு தலைப்பட்ச செயலையோ அல்லது முடிவையோ திரைப்படச் சபை தவிர்க்க வேண்டும்.

இது சம்பந்தமாக, ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் மீதான தடையை நீக்கி, ஜூன் 5 முதல் கர்நாடகாவில் வெளியிட அனுமதிக்குமாறு உங்களை கேட்டுக்கொள்கிறோம். கமல்ஹாசன் கூறிய கருத்து, கன்னட மொழியின் மீதான அன்பின் காரணமாக மட்டுமே தவிர, அந்த மொழியைப் பேசும் லட்சக்கணக்கான மக்களின் இதயங்களில் கன்னட மொழியின் முக்கியத்துவத்தையோ மதிப்பையோ குறைக்க அல்ல. ‘கோகிலா’, ‘புஷ்பக விமானா’ போன்ற படங்கள் மூலம் கன்னட சினிமா துறைக்கும் கமல்ஹாசன் மகத்தான பங்களிப்பைச் செய்துள்ளார்’’ இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டு மக்களுக்கு கமல் நன்றி

சென்னையில் நேற்று நடந்த ‘தக் லைஃப்’ பட பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய கமல், ‘‘உயிரே, உறவே, தமிழே என நான் எப்போதுமே பேசுவேன். அதன் அர்த்தத்தை இப்போது உணர்ந்தேன். எனக்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாட்டுக்கு நன்றி. இன்னும் பேச நிறைய இருக்கிறது. அது தக் லைஃப் பற்றியது அல்ல. அதைப்பற்றி பேச நேரம் ஒதுக்குவது தமிழனாக எனது கடமை’’ என்றார்.