தமிழில் நடிக்க விரும்பும் நோரா பதேஹி
இந்தி மற்றும் தெலுங்கில் கவர்ச்சி நடனத்துக்கு புகழ்பெற்றவர், நோரா பதேஹி. எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டகுபதி நடித்த ‘பாகுபலி: தி பிகினிங்’ என்ற படத்தில் இடம்பெற்ற ‘மனோஹரி’ என்ற பாடலுக்கு நடனமாடி இருந்தார். பிறகு நாகார்ஜூனா, கார்த்தி நடிப்பில் வெளியான ‘தோழா’ என்ற படத்தில், ‘டோர் நம்பர்’ என்ற பாடலுக்கு நடனமாடினார். தற்போது ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் ‘காஞ்சனா 4’ என்ற படத்தில், இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடித்து வருகிறார்.
முன்னதாக ‘காஞ்சனா’ படத்தின் மூன்று பாகங்களையும் இயக்கி நடித்து வெற்றிபெற்ற ராகவா லாரன்ஸ், கடந்த 2020ல் ‘காஞ்சனா’ என்ற படத்தை இந்தியில் ‘லட்சுமி’ என்ற பெயரில் ரீமேக் செய்து இயக்கினார். இதில் அக்ஷய் குமார், கியாரா அத்வானி நடித்தனர். தற்போது ‘காஞ்சனா’ படத்தின் 4ம் பாகத்தை ராகவா லாரன்ஸ் தமிழில் இயக்கி நடித்து வருகிறார். இதில் பூஜா ஹெக்டே, நோரா பதேஹி நடித்து வருகின்றனர். சென்னை ஈசிஆர் பகுதியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
முதல் நேரடி தமிழ் படத்தில் நடிக்கும் நோரா பதேஹி கூறுகையில், ‘தமிழில் ‘காஞ்சனா 4’ படத்தில் நடித்து வருகிறேன். இப்படம் மிகப்பெரிய வெற்றிபெறும். இப்படத்துக்கு பிறகு அடுத்தடுத்த தமிழ் படங்களில் எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். பல தயாரிப்பாளர்கள் என்னை தங்களது படங்களில் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்ய தேடுவார்கள். எனது திரையுலக மார்க்கெட் எகிறும் என்று நம்புகிறேன்’ என்றார்.