‘தனி ஒருவன் 2’ தாமதமாவது ஏன்?
கடந்த 2015ல் மோகன் ராஜா இயக்கத்தில் ரவி மோகன், அரவிந்த்சாமி, நயன்தாரா, ஹரீஷ் உத்தமன், கணேஷ் வெங்கட்ராமன் நடிப்பில் திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலித்த படம், ‘தனி ஒருவன்’. ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரித்த இப்படத்தின் 2வது பாகமாக, ‘தனி ஒருவன் 2’ என்ற படத்துக்கான அறிவிப்பு கடந்த 2023ல் வெளியிடப்பட்டது. ஆனால், அதற்கு பிறகு இப்படம் தொடர்பான எந்த அப்டேட்டும் வரவில்லை. சமீபத்தில் விருது விழா ஒன்றில் பங்கேற்ற மோகன் ராஜாவிடம் கேட்டபோது, ‘சில நாட்களுக்கு முன்பு அர்ச்சனா கல்பாத்தியுடன் இப்படம் குறித்த பேச்சுவார்த்தை நடந்தது. நான் சொன்ன கதையை கேட்ட அவர், ‘இது சரியான நேரம் இல்லை’ என்றார். உடனே நான் அவரிடம், `நான் சொன்ன கதையை பற்றித்தானே சொல்கிறீர்கள்? இந்த கதைக்கு அவ்வளவு செலவாகுமா?’ என்று கேட்டேன்.
‘இல்லை. நீங்கள் சாதாரண ஒரு கதையை சொல்லவில்லை. இப்படத்தின் 2வது பாகத்தை உருவாக்க இது சரியான நேரம் கிடையாது. ஆனால், இது கண்டிப்பாக உருவாகும். திரைத்துறையின் நிலை மேம்படட்டும்’ என்று சொன்னார். ‘தனி ஒருவன் 2’ படம் சம்பந்தமாக நாங்கள் தொடர்ந்து பேசிக்கொண்டு இருக்கிறோம். நினைத்தது போல் விரைவில் நடக்குமா என்று தெரியவில்லை. ஆனால், கண்டிப்பாக ஒருநாள் ‘தனி ஒருவன் 2’ படம் மிகப் பிரமாண்டமான முறையில் உருவாகும்’ என்றார்.