தந்த்ரா விமர்சனம்...
அன்பு மயில்சாமியும், பிருந்தா கிருஷ்ணனும் காதலித்து வருகின்றனர். அவர்களின் திருமண பேச்சுவார்த்தை நடக்குபோது குறுக்கிடும் துஷ்டசக்தி பெண், மணப்பெண்ணுக்கு மரணம் ஏற்படும் என்று சொல்லி அதிர வைக்கிறார். அவர் ஏன் அப்படி சொன்னார் என்று பிருந்தா கிருஷ்ணனின் பெற்றோரிடம் விசாரிக்கும்போது, பிருந்தா கிருஷ்ணன் அவர்களுடைய மகள் இல்லை என்பதும், தந்தை செய்த பாவத்துக்காக ஒரு சக்தி பிருந்தா கிருஷ்ணனை பழிவாங்க காத்திருக்கிறது என்பதும் தெரியவருகிறது.
பிருந்தா கிருஷ்ணன் யாருடைய மகள், பெற்றோர் செய்த பாவம் என்ன, காதலனுடன் திருமணம் நடந்ததா என்பது மீதி கதை. ஜாலியாக இருக்கும் அன்பு மயில்சாமி, துஷ்ட சக்தியிடம் இருந்து காதலியை காப்பாற்ற துடிக்கும்போது நன்றாக நடித்துள்ளார். காதல் உணர்வையும், பய உணர்வையும் பிருந்தா கிருஷ்ணன் கச்சிதமாக வெளிப்படுத்தி இருக்கிறார். மனித உயிர்களை பலியிட்டு புதையலை அடைய துடிக்கும் மந்திரவாதி நிஹாரிகா, இன்னொரு மந்திரவாதி ஜாக் நடிப்பு மிரட்டலாக இருக்கிறது.
நிழல்கள் ரவி, சசிகுமார் சுப்ரமணியன், ஜாவா சுந்தரேசன், ‘சித்தா’ தர்ஷன், சுவாமிநாதன் உள்பட அனைவரும் நன்கு நடித்துள்ளனர். ஹாசிஃப் எம்.இஸ்மாயில் ஒளிப்பதிவும், கணேஷ் சந்திரசேகர் பின்னணி இசையும் கதையின் ஓட்டத்துக்கு உதவி செய்துள்ளன. ஜனரஞ்சக அம்சங்களுடன் அமானுஷ்ய திரில்லர் படத்தை கொடுத்துள்ள இயக்குனர் வேதமணி, ‘நல்லதும், கெட்டதும் சேர்ந்ததுதான் இந்த உலகம். கெட்டதை தவிர்க்க முடியாது’ என்று சொல்லியிருக்கிறார். மேக்கிங்கில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
