தெலங்கானா முதல்வர் அழைத்தபோது பெண்ணுடன் டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தேன்: சிரஞ்சீவி பேச்சால் சர்ச்சை
ஐதராபாத்: தெலங்கானா ரைசிங் குளோபல் உச்சி மாநாட்டில் சிரஞ்சீவி சமீபத்தில் தெரிவித்த கருத்துக்குப் பிறகு சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறார். நிதி ஆயோக் துணைத் தலைவர் சுமன் பெரி மற்றும் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா ஆகியோருடன் இணைந்து சிரஞ்சீவி இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதுதான் சர்ச்சை ஆகியுள்ளது. இந்த நிகழ்வில் சிரஞ்சீவி பேசும்போது, ‘‘இங்கு அரசியல் தலைவர்கள், நிதித்துறை, ஆட்டோமொபைல் உள்ளிட்ட துறையில் இருக்கும் ஜாம்பவான்கள் இருக்கும்போது, நடிகனுக்கு என்ன வேலை என்றுதானே நீங்கள் கேட்கிறீர்கள். நானும் என்னை நானே அது பற்றி கேட்டுக்கொண்டேன். உங்களுக்கு ஒன்று தெரியுமா? இந்த நிகழ்வுக்காக என்னை முதல்வரே அழைத்தபோது, நான் இளம்பெண்ணுடன் டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தேன்.
சமீபத்தில் அன்னபூர்ணா ஸ்டுடியோவில் ஒரு படத்தின் படப்பிடிப்பில் இளம்பெண்ணுடன் டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தேன். அப்போது துணை முதல்வர் பட்டி விக்ரமார்கா மற்றும் ஐடி அமைச்சர் தர் பாபு ஆகியோரை முதல்வர் ரேவந்த் ரெட்டி படப்பிடிப்பு தளத்திற்கு அனுப்பியிருந்தார். அவர்கள் என்னை பார்க்க வந்தபோது துள்ளலாக ஆடிக்கொண்டிருந்தேன். அதன் பிறகு போன் மூலம் முதல்வரிடம் பேசினேன்’’ என கூறினார். இந்த பேச்சை கேட்ட நெட்டிசன்கள் பலரும், ஒரு பெரும் நிகழ்வில் கலந்துகொள்பவர், பெண்ணுடன் ஆடிக்கொண்டிருந்தேன் என்றெல்லாம் எதற்கு பேச வேண்டும்? சிரஞ்சீவி இதுபோல் பேசுபவர் கிடையாது. ஆனால் அவருக்கு என்ன ஆனது என ஒருவரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
