தெலுங்கு பட உலகில் தொடரும் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் படப்பிடிப்புகள் பாதிப்பு
ஐதராபாத்: தெலுங்கு திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பு (TFIEF) நடத்தும் வேலைநிறுத்தம், இன்று 16வது நாளை நெருங்கியுள்ளது. தொழிலாளர் நலனுக்காக உருவான TFIEF என்ற அமைப்பு, 30 சதவீதம் உயர்வு கேட்டுள்ளனர். மாதந்தோறும் வழங்கப்பட்டு வந்த ஊதியத்தை; வேலை முடிந்த அந்த நாளிலேயே கொடுக்க வேண்டும் என்றும், சில துறைகளுக்கு மட்டும் அதிக கூலி உயர்வு கொடுப்பதை நிறுத்திவிட்டு; அனைத்து துறையினருக்கும் சமமாக கூலியை உயர்த்தி கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் விடுத்துள்ளனர்.
இந்த கோரிக்கைகளுக்கு தயாரிப்பாளர்கள் தரப்பு சரியாக பதிலளிக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம், சிறுபட்ஜெட் படங்களுக்கு கூலியை அதிகமாக கொடுப்பது என்பது கடினமான விஷயம் என்று சொல்லப்படுகிறது. தற்போது நடிகர், நடிகைகளின் சம்பளம் அதிகரித்துள்ளது. ஓடிடி உள்பட பல டிஜிட்டல் வியாபாரங்களும் நினைத்த மாதிரி அமைவதில்லை.
இந்த நேரத்தில் கூலி உயர்வை 30 சதவீதம் உயர்த்துவது தயாரிப்பாளர்களுக்கு நிதிச்சுமையை ஏற்படுத்தும் என்றும், இந்த வருடம் 15 சதவீதம் மட்டுமே உயர்த்துவதாகவும், அடுத்தடுத்த வருடங்களில் இன்னும் அதிகப்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். தயாரிப்பாளர்களின் இந்த முடிவை ஏற்க மறுத்த TFIEF அமைப்பு, அனைவருக்கும் சமமாக கூலி உயர்வு கிடைக்க வேண்டும் என்று கேட்டுள்ளது.
இந்த அமைப்பை சேர்ந்த தொழிலாளர்கள் பலர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதால் ஆந்திராவிலும், தெலங்கானாவிலும் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் தடைபட்டுள்ளது. இம்மாத வெளியீட்டுக்கு திட்டமிட்டிருந்த படங்களின் வெளியீடும் மாற்றப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் உறுப்பினர்களாக இல்லாதவர்களை வைத்து சில தயாரிப்பாளர்கள் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.
சில தயாரிப்பாளர்கள், இந்த வேலைநிறுத்தம் காரணமாக தங்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாக இந்த அமைப்பின் தலைவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதுகுறித்து அரசு மூலம் தீர்வு காண பல தயாரிப்பாளர்கள் ஆந்திராவிலும், தெலங்கானாவிலும் அமைச்சர்களை சந்தித்து பேசியுள்ளனர். தெலுங்கு படவுலக பிலிம் சேம்பரின் (TFCC) செயல் குறித்து தொழிலாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.