‘பாகுபலி’ படத்தை ஸ்ரீதேவி புறக்கணித்த மர்மம்
மறைந்த ஸ்ரீதேவி பற்றிய பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்கள் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், ராணா டகுபதி, சத்யராஜ், தமன்னா, நாசர் நடித்த ‘பாகுபலி’ படத்தின் இரு பாகங்களும் மிகப்பெரிய வெற்றிபெற்றன. வசூலிலும் மகத்தான சாதனைகள் படைத்தன. இப்படத்தின் முக்கிய கதாபாத்திரமான சிவகாமி தேவி என்ற வேடத்தில் நடிக்க முதலில் தேர்வு செய்யப்பட்டவர், ஸ்ரீதேவி. இதையடுத்து அந்த கேரக்டரில் நடிக்க ஸ்ரீதேவியும் அதிக ஆர்வம் காட்டினார்.
ஆனால், சம்பளம் மற்றும் பிற வசதிகள் குறித்து தயாரிப்பாளருடன் ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் முரண்பாடுகள் ஏற்பட்டது. இந்த பிரச்னைகளுக்கு பிறகு எஸ்.எஸ்.ராஜமவுலிக்கும், ஸ்ரீதேவிக்கும் இடையே பலத்த கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாகவே ‘பாகுபலி’ படத்தில் ஸ்ரீதேவி நடிக்கவில்லை. இந்த விவகாரத்தின் பின்னணி குறித்து ஸ்ரீதேவியின் கணவரும், இந்தி பட தயாரிப்பாளருமான போனி கபூர் மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், ‘அதாவது, `பாகுபலி’ படத்தில் ஸ்ரீதேவி நடிக்காததற்கு முக்கிய காரணம், தயாரிப்பாளர்களால் உருவாக்கப்பட்ட ஒருவிதமான குழப்பம்தான். எஸ்.எஸ்.ராஜமவுலி எங்கள் வீட்டுக்கு வந்து கதை சொன்னார். ஸ்ரீதேவிக்கு கதையும், கதாபாத்திரமும் பிடித்திருந்த நிலையில், அவரும் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.
இந்தியாவின் தலைசிறந்த நடிகைகளில் ஒருவர், நடிப்பால் படத்துக்கு கூடுதல் பலம் சேர்ப்பார். மேலும், இந்தி, தமிழ் ஆகிய மொழிகளிலும் அவருக்கு கிடைத்துள்ள அங்கீகாரம் படத்துக்கு மிகப்பெரிய பலம். இத்தனை சாதகமான சூழ்நிலைகள் இருந்தும் கூட, தயாரிப்பாளர்கள் ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ என்ற படத்துக்காக ஸ்ரீதேவி வாங்கிய சம்பளத்தை விட குறைவான சம்பளத்தையே பேசினர். அதனால்தான் அவர் இப்படத்தில் நடிக்கவில்லை. ஆனால், ஸ்ரீதேவி அதிக சம்பளம் கேட்பதாக எஸ்.எஸ்.ராஜமவுலியிடம் தெரிவித்துள்ளனர். நடந்தது என்ன என்பதை அவர்கள் சொல்லவில்லை. இதுபோன்ற தவறான விஷயங்களை எஸ்.எஸ்.ராஜமவுலியிடம் சொன்ன குற்றவாளிகள் அவர்கள்தான்’ என்றார்.