அடுத்தடுத்த சம்பவம் பயந்துபோன நடிகை
நடிகர் ‘சிக்கல்’ ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இரவின் விழிகள்’ படத்தை மகேந்திரா பிலிம் பேக்டரி சார்பில் மகேந்திரன் தயாரித்து ஹீரோவாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நீமா ரே நடித்துள்ளார். இவர் கடந்த 2020ம் ஆண்டு வெளியாகி சிறந்த துளு படத்திற்கான தேசிய விருதை வென்ற ‘பிங்காரா’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தவர். தற்போது தமிழில் தனது முதல் படத்தில் நீமா ரே நடித்து வருகிறார்.
இப்படத்தில் நிழல்கள் ரவி, மஸ்காரா அஸ்மிதா, கும்தாஜ், சேரன் ராஜ், சிஸ்சர் மனோகர், ஈஸ்வர் சந்திரபாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படம் சமூகவலைத்தளங்களை மையமாக வைத்து சைக்கோ திரில்லர் படமாக உருவாகி வருகிறது. இந்நிலையில் இதன் படப்பிடிப்பு வெள்ளிமலை பகுதியில் நடைபெற்று வருகிறது. அப்போது அங்கு சுற்றுலா வந்திருந்த சில இளைஞர்கள் படப்பிடிப்பு தளத்தில் அத்துமீறி நீமா ரேவின் கையைபிடித்து இழுத்து வம்பு செய்ய முயன்றுள்ளனர். பின்னர் இயக்குநர் சிக்கல் ராஜேஷ் அந்த இளைஞர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சி செய்தும் அவை பலனளிக்கவில்லை.
இதனை தொடர்ந்து அங்கு வந்திருந்த மற்ற சில சுற்றுலா பயணிகள் உதவியோடு ஹீரோயினிடம் அத்துமீறிய ரோமியோக்களை துரத்தி உள்ளது படக்குழு. இதனால் நீமா ரே ரொம்பவும் பயந்து போய் விட்டாராம். அன்று இரவு இப்படத்தில் இடம்பெறும் ‘வாடா கருப்பா’ என்ற ஆக்ரோஷமான பாடல் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இந்த பாடலால் அப்பகுதியில் இருந்த பெண்கள் சிலர் இயல்பாகவே சாமி வந்து ஆடத்தொடங்கியுள்ளனர். அன்று காலையில் நடந்த சம்பவத்தால் அதிர்ந்து போன நாயகி நீமா ரே, இதை பார்த்தும் மேலும் மிரண்டு போயிருக்கிறாராம். கடைசியில் அவரை ஒரு வழியாக சமாதானப்படுத்தி மறுநாள் இயல்பு நிலைக்கு கொண்டுவந்துள்ளனர்.