‘கோடித்துணி’ சிறுகதை திரைப்படமானது
பென்ச் பிலிம்ஸ், என்ஜாய் பிலிம்ஸ், ஃபிரோ மூவி ஸ்டேஷன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து, ‘அங்கம்மாள்’ என்ற படத்தை வெளியிடுகின்றனர். இதை எஸ்.கார்த்திகேயன், பிரோஸ் ரஹீம், அஞ்சோய் சாமுவேல் தயாரித்துள்ளனர். எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘கோடித்துணி’ என்ற சிறுகதையின் தழுவலே ‘அங்கம்மாள்’ என்ற படமாகும்.
இதுகுறித்து பெருமாள் முருகன் கூறுகையில், ‘எனது கதை என்றாலும், இதற்கான தழுவல் உரிமையை கொடுத்ததும் என் பங்கு முடிந்துவிட்டது. கதையை முழுமையாக புரிந்துகொண்டு, அதை படமாக உருவாக்கியதில் இயக்குனரின் திறமையை புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு சிறுகதை படமாக மாறும்போது, அதில் பல்வேறு விஷயங்கள் மாறலாம். இக்கதையில் கிளைமாக்ஸ் மற்றும் பெண் கேரக்டர்களை முன்னிலைப்படுத்துவதை சொல்லலாம். 25 நிமிடங்கள் கொண்ட குறும்படத்தின் கதையை, முழுநீள படமாக நேர்த்தியுடனும், ஆழத்துடனும் இயக்குனர் மாற்றியுள்ளார்.
‘கோடித்துணி’ சிறுகதை தீவிரத்துடனும், ஆழமான உணர்வுகளுடனும் படமாக்கப்பட்டுள்ளது. முக்கிய வேடத்தில் கீதா கைலாசம் நடித்துள்ளார். மற்றும் சரண், பரணி, முல்லையரசி, தென்றல் ரகுநாதன் நடித்துள்ளனர். அஞ்சோய் சாமுவேல் ஒளிப்பதிவு செய்ய, முகமது மக்பூல் மன்சூர் இசை அமைக்க, விபின் ராதாகிருஷ்ணன் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்’ என்றார்.
