எம்.பியை மயக்கிய ‘காலா’ பட நடிகர்
நாடாளுமன்றத்திலும், சோஷியல் மீடியாவிலும் பிரபலமாக இருப்பவர், மேற்கு வங்க எம்.பி மஹுவா மொய்த்ரா. சமீபத்தில் அவரிடம், ‘உங்களுக்கு பிடித்த பாலிவுட் நடிகர் யார்?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‘எனக்கு பாலிவுட் நடிகர் பங்கஜ் திரிபாதியை தீவிரமாக பிடிக்கும். என்னுடைய கிரஷ் என்று கூட சொல்லலாம். அவருக்கு நான் லெட்டர் எழுதி அனுப்பியிருக்கிறேன். அதில், ‘உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். உங்களுடன் சேர்ந்து ஒரு காபி குடிக்க வேண்டும். எப்போது சந்திக்கலாம்?’ என்று கேட்டிருந்தேன். ஆனால், எனக்கு அவர் பதில் எழுதவில்லை. எனவே, அவரை பேட்டி எடுத்த ஒருவரிடமும் இத்தகவலை சொன்னேன். ஆனால், ரசிகர்களை அவர் தனிப்பட்ட முறையில் சந்திப்பது இல்லை என்று என்னிடம் சொல்லப்பட்டது. இதனால், நான் எதிர்பார்த்த சந்திப்பு நடக்கவில்லை.
எனினும், பங்கஜ் திரிபாதி மீதான அபிமானம் மேலும் அதிகரித்தது. ஒருமுறை நடிகரும், எம்.பியுமான ரவிகிஷன் மூலம் பங்கஜ் திரிபாதியிடம் பேச முயன்றேன். உடனே போனில் பங்கஜ் திரிபாதியிடம் பேச அவர் ஏற்பாடு செய்தார். அப்போது என்ன பேசுவதென்றே தெரியாமல் அதிர்ச்சி அடைந்தேன். அவருக்கு நான் எழுதி அனுப்பிய கடிதத்தைக்கூட அவர் மறந்துவிட்டார்’ என்று சொல்லி வெட்கப்பட்டார். பாலிவுட்டில் ‘நியூட்டன்’, ‘ஸ்ட்ரீ’, ‘மிமி’, ‘மிர்சாபூர்’ ஆகிய ஹிட் படங்களின் மூலம் ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் பங்கஜ் திரிபாதி (48), தமிழில் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ என்ற படத்திலும் நடித்திருக்கிறார்.