ரூ.450 கோடி சொத்துகளை நிராகரித்த நடிகை
பாலிவுட்டின் ‘ஹீ-மேன்’, ‘தரம் பாஜி’ என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்டவர், தர்மேந்திரா. 89 வயதான அவர், உடல்நலக்குறைவு காரணமாக தீவிர சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி திடீரென்று அவர் மரணம் அடைந்தார். 300க்கும் மேற்பட்ட இந்தி படங்களில் நடித்துள்ள தர்மேந்திரா, தனது 19வது வயதில் பிரகாஷ் கவுர் என்பவரை திருமணம் செய்தார். அவர்களுக்கு மகன்கள் சன்னி தியோல், பாபி தியோல், மகள்கள் விஜேதா தியோல், அஜிதா தியோல் ஆகியோர் இருக்கின்றனர். இந்நிலையில், இந்தியாவின் கனவுக்கன்னியாக இருந்த தமிழ்நாட்டை சேர்ந்த ஹேமமாலினியை காதல் திருமணம் செய்த தர்மேந்திரா, அவர் மூலம் ஈஷா தியோல், அஹானா தியோல் ஆகிய மகள்களுக்கு தந்தையானார். சன்னி தியோல், பாபி தியோல் இருவரும் முன்னணி நடிகர்களாக இருக்கின்றனர். ஈஷா தியோல், அஹானா தியோல் இருவரும் நடிகையாக இருக்கின்றனர்.
இந்நிலையில், தனது தந்தை சம்பாதித்த 450 கோடி ரூபாய் சொத்துகளை நிராகரித்துவிட்டு, அதிலிருந்து ஒன்றை மட்டும் பெற விரும்புவதாக அஹானா தியோல் தெரிவித்துள்ளார். அதாவது, தர்மேந்திரா வாங்கிய முதல் ஃபியட் கார் வேண்டும் என்று குடும்பத்தினரிடம் கேட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘என் தந்தை முதன்முதலில் வாங்கிய ஃபியட் கார் அழகாகவும், பழமையாகவும் இருக்கிறது. இந்த காரில் மகிழ்ச்சியாக பயணம் செய்ததன் மூலம் அவர் பல்வேறு இனிமையான நினைவுகளை சுமந்திருப்பார் என்று உறுதியாக நம்புகிறேன். எனவே, அந்த ஃபியட் காரை எனக்கு சொந்தமாக்க வேண்டும் என்று விரும்புகிறேன்’ என்றார். கோடிக்கணக்கான ரூபாயை விரும்பாத அவரது செயல் ரசிகர்களை மட்டுமின்றி, நெட்டிசன்கள் மற்றும் திரையுலகினரை பெரிதும் வியக்க வைத்திருக்கிறது.
