குறுக்குவழியில் முன்னேறுகின்றனர் :நடிகை புலம்பல்
எஸ்.மோகன் எழுதி இயக்க, எம்.என்.ஆர் பிக்சர்ஸ் சார்பில் எம்.நாகரத்தினம் தயாரித்து ஹீரோவாக நடித்துள்ள படம், ‘வள்ளிமலை வேலன்’. ஹீரோயினாக இலக்கியா, முக்கிய வேடங்களில் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், செந்தில், செம்புலி ஜெகன், சுரேந்தர், முத்துக்காளை, காவிரி மகிமா, கணபதி நடித்துள்ளனர். மணிகண்டன் ஒளிப்பதிவு செய்ய, ஏ.கே.ஆல்ட்ரின் இசை அமைத்துள்ளார். ராஜேந்திர சோழன் எடிட்டிங் செய்ய, இடி மின்னல் இளங்கோ சண்டைப் பயிற்சி அளித்துள்ளார். படம் குறித்து இலக்கியா கூறுகையில், ‘இது எனக்கு கிடைத்துள்ள முதல் மேடை.
காவிரி பாய்ந்தோடும் மண்ணில் பிறந்து, சென்னையில் வளர்ந்து, உங்கள் முன்னால் கதாநாயகியாக நிற்கிறேன். நானெல்லாம் ஹீரோயின் ஆவேனா என்று நம்பிக்கை இல்லாமல் யோசித்து பார்த்துள்ளேன். நான் சினிமாவுக்கு வந்து 4 வருடங்களாகி விட்டது. சின்னச்சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். இப்போது ஹீரோயினாக நடித்திருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். திரையுலகில் நிறையபேர் குறுக்குவழியில் முன்னேறுகின்றனர். ஆனால், உண்மையாக உழைக்கும் திறமைசாலிகளுக்கு சரியான வாய்ப்புகள் கிடைப்பது இல்லை. உண்மையான திறமையாளர்களுக்கு சினிமா கலைஞர்கள் அனைவரும் வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
இயக்குனர் பொறுமையாக சொல்லிக்கொடுத்து என்னை நடிக்க வைத்தார். இக்காலத்தில் இப்படி ஒரு நபரா என்று ஆச்சரியப்பட வைத்தவர், நாகரத்தினம். ஊர் மக்கள் அவரை மிகவும் நேசிக்கின்றனர்’ என்றார். இப்படத்தின் இயக்குனர் எஸ்.ேமாகன், தான் இயக்குனராக அறிமுகமாகும் வரை கால்களில் செருப்பே அணியக்கூடாது என்று சபதம் செய்து, அதை கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கடைப்பிடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.