திருக்குறள் - திரைவிமர்சனம் : இசைஞானி இளையராஜா இசையில் உருவாகி வெளியாகியுள்ளது
இசைஞானி இளையராஜா இசையில் உருவாகி வெளியாகியுள்ளது "திருக்குறள் " திரைப்படம். பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரிலும், காந்தியின் வாழ்க்கை வரலாற்றை " வெல்கம் பேக் காந்தி " என்ற பெயரிலும் திரைப்படமாகத் தயாரித்த ‘ரமணா கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனம், தற்போது ‘திருக்குறள்’ திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. காமராஜ், வெல்கம் பேக் காந்தி படத்தை இயக்கிய ஏ.ஜே.பாலகிருஷ்ணன் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
வள்ளுவர் வாழ்வியல், திருக்குறள் உருவான வரலாறு, உடன் வள்ளுவர் காலத்தில் நடந்த குமணன் - இளங்குமணன் போர் உள்ளிட்ட அனைத்துமாக இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் வள்ளுவராக கலைச்சோழன், வாசுகியாக தனலட்சுமி, பாண்டிய மன்னனாக ஓ.ஏ.கே.சுந்தர், நக்கீரராக இயக்குநர் சுப்ரமணிய சிவா, புலவர் பெருந்தலைச்சாத்தனாக கொட்டாச்சி ஆகியோரோடு, குணாபாபு, பாடினி குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். அத்தனைப்பேரும் தனக்கான கடமையை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
இசைஞானி இளையராஜா பாடல்கள் எழுதி இசையமைத்துள்ளார். யார் நடிகர், எந்த இயக்குனர் என பாகுபாடு பார்க்காதவர் கேள்வி கேட்காதவர் திருக்குறள் என்கிற பெயருக்காகவே தனது இசையைக் கொடுத்திருக்கிறார் இசைஞானி. பாடல்களும் , இசையும் மிக அற்புதம். இவ்வளவு தான் பட்ஜெட், இதுதான் களம் என்கிற கட்டுப்பாட்டுடன் செயல்பட்டாலும் , அதில் என்ன சிறப்புக் கொடுக்க முடியுமோ கொடுத்திருக்கிறார்கள் படக்குழு. கலை இயக்குநராக சுரேஷ் கலேரியும், ஆடை வடிவமைப்பாளர் சுரேஷ் குமாரும் தனித்துவம் பெறுகின்றனர்.
செம்பூர்.கே.ஜெயராஜ் கதை, திரைக்கதை, வசனம் இன்னும் தேடல்களுடன் திருக்குறள் உருவான காட்சிகள், தற்போதைய தவறான சில பொருள் விளக்கங்களையும் தேடி சேர்ந்திருந்தால் இன்னும் சுவாரசியமாக இருந்திருக்கும். மேலும் இருக்கும் வரலாற்றை அப்படியே கொடுத்திருக்கிறார்கள். இன்னும் தமிழ் சமூகம் தெரியாத சில சம்பவங்கள், தருணங்களைக் கூடியிருந்தால் தமிழ் மொழிக்கான படமாக மாறியிருக்கும்.
எட்வின் சகாய் ஒளிப்பதிவு கிடைத்த லோகேஷனில் மிக அற்புதமாக சங்க காலத்தைக் கொண்டு வந்திருக்கிறார். எந்த பிரம்மடாண்ட செட்டோ, பொருட்செலவோ இல்லாமல் இந்த அளவு காட்சிகள் கொடுத்தது அருமை. மொத்ததில் , " திருக்குறள் " இந்தத் தலைப்பைத் தாண்டி எதுவும் யோசிக்க முடியாத நிலையில் இப்படம் நன்றாக இருக்கிறதா இல்லையா என்கிற கேள்விக்கே இடமில்லை. நுனிப்புல் மேயும் தலைமுறைக்கு வள்ளுவன் வாழ்வியலை இப்படித்தான் கொடுத்தாக வேண்டும் என்கிற நிலையில் இப்படம் முக்கியத்துவம் பெறுகிறது.