அந்த 7 நாட்கள் : விமர்சனம்
வானியல் துறை மாணவர் அஜிதேஜ், 300 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்படும் சூரிய கிரகணத்தை டெலஸ்கோப்பில் பார்க்கிறார். அப்போது அவருக்கு அபூர்வ சக்தி கிடைக்கிறது. அவர் யாருடைய கண்களையாவது பார்த்தால், சம்பந்தப்பட்டவர் மரணம் அடையும் நேரம் தெரிகிறது. ஸ்ரீ ஸ்வேதாவை காதலிக்கும் அஜிதேஜ், அவரது கண்களை பார்க்கும்போது, இன்னும் 7 நாட்களில் அவர் மரணம் அடைவார் என்று தெரிகிறது. பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை. எதிர்பாராத திருப்பங்களுடன் எழுதி இயக்கியுள்ள எம்.சுந்தர், சூரிய கிரகணத்தை பற்றிய மூடநம்பிக்கையை விதைக்கிறாரோ என்று நினைக்கும்போது ஒரு திருப்பம் ஏற்படுகிறது. இளம் காதல் ஜோடி அஜிதேஜ், ஸ்ரீ ஸ்வேதா பொருத்தமான தேர்வு. அமைச்சராக கே.பாக்யராஜ், அல்லக்கையாக நமோ நாராயணன், மலைவாசியாக தலைவாசல் விஜய் உள்பட அனைவரும் கச்சிதமாக நடித்துள்ளனர். கதைக்கேற்ற பாடல்களையும், பின்னணி இசையையும் சச்சின் சுந்தர் வழங்கியுள்ளார். கோபிநாத் துரையின் கேமரா கொடைக்கானல் மலை மற்றும் காடுகளின் அழகை அள்ளி வந்திருக்கிறது. அடுத்து இதுதான் நடக்கும் என்று கணிக்க முடிவது மைனஸ்.