நாளை நமதே விமர்சனம்...
அடிக்கடி சாதி மோதல்கள் நடக்கும் சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தின் பஞ்சாயத்து அமைப்பு, பட்டியலினத்தவருக்கு என்று அரசு அறிவிக்கிறது. முன்பு நடந்த கொலையால் பயந்த பட்டியலினத்தை சேர்ந்த யாரும் தேர்தலில் போட்டியிட மறுக்கும் நிலையில், அப்பகுதியில் மருத்துவம் படித்த மதுமிதா தேர்தலில் போட்டியிடுகிறார். அவரை கொல்ல முயற்சிக்கும் குறிப்பிட்ட சாதியினர், தேர்தல் நடத்த அனுமதித்தார்களா? மதுமிதா என்ன ஆனார் என்பது மீதி கதை.
பாரதி கண்ட புதுமைப்பெண்ணாக புரட்சி செய்து, பெண்களுக்கு கவுரவம் சேர்த்திருக்கும் மதுமிதாவின் சிறந்த நடிப்புக்கு விருதுகள் கிடைக்கும். வி.செந்தில் குமார், வேல்முருகன், ராஜலிங்கம், முருகேசன், மாரிக்கண்ணு, கோவை உமா மற்றும் கிராமத்து மக்கள், அந்தந்த கேரக்டரில் இயல்பாக வாழ்ந்துள்ளனர்.
யதார்த்தமான கிராமத்தை ஒளிப்பதிவாளர் பிரவீன் கண்முன் கொண்டு வந்துள்ளார். ஹரி கிருஷ்ணன் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கூடுதல் பலம் சேர்த்துள்ளன. எழுதி இயக்கியுள்ள வெண்பா கதிரேசன், சமூகம் முன்னேற அனைவரும் அரசியலுக்கு வரவேண்டும் என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறார். வசனங்கள் சாட்டையடியாக இருக்கின்றன. திடீர், திடீரென்று மக்கள் மனம் மாறுவது மட்டும் நெருடுகிறது.