பழங்குடியின மக்களுக்கு உதவிய தயாரிப்பாளர்
சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும் மருத்துவருமான விமலாராணி பிரிட்டோ, நீலகிரி, கூடலூர் பழங்குடியினர் சமூகத்துக்கு ரூ.50 லட்சத்துக்கு மேல் மதிப்புள்ள ஆம்புலன்ஸ், சரக்கு வாகனம் மற்றும் தையல் இயந்திரங்களை நன்கொடையாக வழங்கியுள்ளார். பழங்குடியினர் சமூகங்களின் நிலையான முன்னேற்றத்தையும், நலனையும் மேம்படுத்தும் நோக்கில், ‘சீக் பவுண்டேஷன்’ என்ற தொண்டு நிறுவனத்தை டாக்டர் விமலா ராணி பிரிட்டோ நடத்தி வருகிறார்.
தற்போது அந்த நிறுவனம் சார்பில் ஒரு ஆம்புலன்ஸ், ஒரு சரக்கு வாகனம் மற்றும் பல தையல் இயந்திரங்களை கோத்தகிரி மற்றும் கூடலூர் பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினர் மக்களுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். சென்னை செயின்ட் பிரிட்டோஸ் அகாடமியில் நடைபெற்ற இந்த விழாவில் விமலா ராணி பிரிட்டோ, நீலகிரி வாழ் பழங்குடியினர் நலசங்கத்தின் செயலாளர் ஆல்வாஸ், ‘சீக் பவுண்டேஷன்’ தலைமை நிர்வாக அதிகாரி, தாமஸ் பொன்ராஜ், செயிண்ட் பிரிட்டோஸ் அகாடமியின் முதல்வர் மேரி வசந்தகுமாரி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய விமலா ராணி பிரிட்டோ, ‘‘சமூக நலனுக்காக எடுக்கப்படும் ஒவ்வொரு சிறிய அடியும், இரக்கமும் கருணையும் நிறைந்த வலுவான சமுதாயத்தை உருவாக்கும். சேவை, திறன் மற்றும் மரியாதையை எல்லா சமூகங்களுக்கும் கொண்டு செல்வதே எங்கள் நோக்கம்” என்றார்.
