சண்டை போட தயாராகும் திரிப்தி டிம்ரி
இந்தியில் வெளியான ‘அனிமல்’ என்ற படத்தின் மூலம் பிரபலமானவர், திரிப்தி திம்ரி. அடுத்து அவர் நடித்துள்ள ‘தடக் 2’ என்ற படம், வரும் ஆகஸ்ட் 1ம் தேதி வெளியாகிறது. ‘பரியேறும் பெருமாள்’ என்ற தமிழ்ப் படத்தின் இந்தி ரீமேக்கான இதில், சித்தாந்த் சதுர்வேதி ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய திரிப்தி டிம்ரி, ‘கரண் ஜோஹரிடம் இருந்து போன் வந்தது. நல்ல இயக்குனர் ஒருவர் தனது படத்துக்கான கதையை என்னிடம் சொல்ல விரும்புவதாக அவர் தெரிவித்தார். மறுநாள் நான் கதையை கேட்டேன். அது எனக்கு மிகவும் பிடித்தது. கதை சொல்லும்போதே இயக்குனர் தனது தொலைநோக்கு பார்வையில் மிகவும் தெளிவாக இருக்கிறார் என்பதையும், அவர் ஒரு வலிமையான இயக்குனர் என்பதையும் புரிந்துகொண்டதால், இப்படத்தில் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.
இதில் விதி என்ற கேரக்டரில் நடித்துள்ளேன். அவள் ஒரு வலிமையான, மிகவும் உணர்ச்சி வசப்படக்கூடிய ஒரு பெண். காதலுக்காகவும், சுயமரியாதைக்காகவும் இச்சமூகத்துடன் போராட தயாராக இருக்கிறாள். இதில் நடித்தது அதிக உற்சாகத்தை அளித்தது. சித்தாந்த் சதுர்வேதியுடன் பணியாற்றியது நல்ல அனுபவமாக இருந்தது. அவர் ஒரு கடின உழைப்பாளி மற்றும் நேர்மையான நடிகர். அவருடனான கெமிஸ்ட்ரி மிகவும் இயல்பாக இருந்தது. அது திரையில் உண்மையாக தெரியும். ஆக்ஷன் படங்களில் கற்றுக்கொள்வதற்கு நிறைய விஷயங்கள் இருக்கிறது என்பதால், ஆக்ஷன் படங்களில் நடிக்க காத்திருக்கிறேன். பாலிவுட்டில் சாதனை படைத்த நடிகைகள் மீனா குமாரி, மதுபாலா ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்கவும் ஆசைப்படுகிறேன்’ என்றார்.