விருது குழுவினர் மீது ஊர்வசி கடும் தாக்கு
அறிவிக்கப்பட்டுள்ள 71வது தேசிய திரைப்பட விருதுகளில், ‘உள்ளொழுக்கு’ என்ற மலையாள படத்துக்காக சிறந்த துணை நடிகை விருது ஊர்வசிக்கு கிடைத்துள்ளது. இந்நிலையில், விருது குழுவினரை ஊர்வசி கடுமையாக தாக்கி பேசியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், ‘என்னை விருதுக்கு தேர்வு செய்ததற்கு நன்றி. ஆனால், எந்த அடிப்படையில் அல்லது அளவுகோலின் அடிப்படையில் சிறந்த துணை நடிகைக்கான விருதும், விஜயராகவனுக்கு சிறந்த துணை நடிகருக்கான விருதும் வழங்கப்படுகிறது? விஜயராகவன் துணை நடிகர், ஷாருக்கான் சிறந்த நடிகர் என்றால், இந்த நடிப்பை அவர்கள் எவ்வாறு மதிப்பிட்டார்கள்?
எந்த அடிப்படையில் ஒப்பிட்டு மதிப்பிடப்பட்டது? விஜயராகவனை சிறந்த துணை நடிகராகவும், ஷாருக்கானை சிறந்த நடிகராகவும் மாற்றியது எது? சிறந்த நடிகர்கள் இருவர், சிறந்த துணை நடிகர்கள் இருவர். ஆனால், சிறந்த நடிகையாக ஒருவரையும், சிறந்த துணை நடிகையாக ஒருவரையும் தேர்வு செய்திருக்கிறார்கள். நடிகைகளுக்கான விருது ஏன் பகிர்ந்து அளிக்கப்படவில்லை? நாங்களும் வரி செலுத்துகிறோம், மற்றவர்களை போல் எங்கள் வேலைகளை செய்து வருகிறோம். நான் கேட்ட கேள்விகளுக்கு விருது தேர்வு குழு பதிலளிக்க வேண்டும்.
கிடைப்பதை வாங்கி வைத்துக்கொண்டு அமைதியாக இருக்க இது ஒன்றும் ஓய்வூதியம் அல்ல. இது நாங்கள் செய்த வேலைக்கான அங்கீகாரம். ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபி இதுகுறித்து கேள்வி கேட்க வேண்டும்’ என்று பேசியுள்ளார்.